ஊக்கமே ஆக்கம்; ஆக்கமே எழுச்சி என்பார்கள். ஒருவரை நாம் எந்தளவிற்கு ஊக்கப்படுத்துகிறமோ அந்தளவிற்கு ஊக்கம் கொள்பவரிடம் ஆக்கப்பூர்வமான விசயம் வெளிப்படும்.
நாமக்கல் மாவட்டத்தில் இளம் விஞ்ஞானியாக வலம் வருகிறார் ஜிவி பிரகாஷ். அவரது புதியபுதிய கண்டுபிடிப்புகள் நிராகரிக்கப்பட்டும், பரிகாசிக்கப்பட்டும் வருகிறது. திறமைக்கான மதிப்பு இல்லாவிட்டாலும் பரவாயில்லை..வாய்ப்பு கூட இல்லையே என்ற ஆதங்கத்தோடு சுற்றி வரும் அவருக்கு நாமக்கல் நர்ஸ் மகிமா நம்பியாரோடு காதலும் உண்டு. மறுபுறம் வடநாட்டைச் சேர்ந்த ஓர் சிறிய திருட்டுப்படை பெரும் திருட்டை நடத்துகிறது. அந்த திருட்டுக் கும்பலுக்கும் ஜிவி பிரகாஷ் வாழ்க்கைக்கும் ஒரு புள்ளியில் தொடர்பு ஏற்பட, அடுத்தடுத்து என்ன என்பது தான் ஐங்கரன் படத்தின் பரபர திரைக்கதை
5 ஆண்டுகளுக்கு முன்பே எடுக்கப்பட்ட படமாக இருந்தாலும் கண்டினியூட்டி, குவாலிட்டி இரண்டிலும் குறை தெரியவில்லை. ஈட்டி என்ற ஷார்ப்பான படத்தை வழங்கிய இயக்குநர் ரவி அரசு இந்தப்படத்தின் கன்டென்டிலும் ஸ்ட்ராங் காட்டியிருக்கிறார்.
ஜிவி பிரகாஷ் நடிப்பில் பெரிய முதிர்ச்சி இல்லாவிட்டாலும் பெரியளவில் குறையுமில்லை. சண்டைக்காட்சிகளில் உணர்ச்சியை அவர் இன்னும் வெளிப்படுத்தி பவர் கூட்டியிருக்கலாம். மஹிமா நம்பியாரின் கேரக்டர் ஸ்கெட்ச்…சம்திங் மிஸ். ஆடுகளம் நரேன் சின்னச்சின்ன கேப்களிலும் ஸ்கோர் செய்ய, ஹரிஸ்பேரீடி பொளந்து கட்டியிருக்கிறார். மெயின் வில்லனாக நடித்திருக்கும் சித்தார்த் சங்கர் காத்திரமான நடிப்பால் கவர்கிறார்..காளிவெங்கட்டிற்கு யானைப்பசிக்கு சோளப்பொறி போன்ற கேரக்டர் என்றாலும் தனது பங்களிப்பை நிறைவு செய்வதில் அவர் குறை வைக்கவில்லை
ஒளிப்பதிவும் பின்னணி இசையும் படத்தின் பலம். முக்கியமாக ஸ்டண்ட் சீக்வென்ஸ்கள் புதுரகம். பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லை
படத்தின் பின்பாதியில் மிக முக்கியமான ஒரு விசயத்தை கையில் எடுத்திருக்கிறார்கள். அது படத்திற்கு பெரும் பலம் சேர்த்தும் இருக்கிறது. சிற்சில சமாளிப்புகள் படத்தில் தெரிந்தாலும் சமகாலத்தின் தேவையை சரியாகச் சொல்லிருப்பதால் ஐங்கரனை வரவேற்போம்
-மு.ஜெகன் கவிராஜ்