அட்டக்கத்தி தினேஷ், சஞ்சிதா ஷெட்டி நடிப்பில் ரீலீசுக்கு தயாராகி வரும் திரைப்படம் ‘பல்லு படாம பாத்துக்கோ’. இப்படத்தின் டிரைலர் சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி வரவேற்ப்பை விட கடும் விமர்சனத்தைப் பெற்று வரும் நிலையில், படத்தின் தலைப்பிற்காக நாயகன் தினேஷ் பொதுவாக மன்னிப்பு கேட்டிருக்கிறார். இது குறித்து அவர் கூறும் போது, “இப்படம் ஜாம்பி வகைத் திரைப்படம்.
ஜாம்பியின் பற்கள் பட்டுவிட்டால் நாமும் ஜாம்பியாக மாறிவிடுவோம் என்பதால் இந்த தலைப்பு வைக்கப்பட்டது. நான் முதலில் தலைப்பை மாற்ற வேண்டும்; இல்லையென்றால் படத்தில் நடிக்க மாட்டேன் என்று தெரிவித்தேன். அவர்களும் வேறு ஒருவரை வைத்து படத்தைத் தொடங்கினார்கள். ஆனால் மீண்டும் படம் என்னிடமே வந்துவிட்டது. படத்தின் தலைப்பு பொருத்தமாக இருப்பது போல் தோன்றியதால் நடிக்க சம்மதித்தேன். இந்த தலைப்பிற்காக நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். இப்படத்தை டெம்பிள் மங்கிஸ் என்னும் யு டியூப் சேனல் பிரபலமான வரதராஜன் என்பவர் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.