அருண்விஜய்யின் சினம்
தமிழ் சினிமாவில் சமீபமாக வெகு நேர்த்தியான படங்களால் வெற்றி நாயகனாக வலம் வரும் அருண் விஜய் அடுத்ததாக நடிக்கும் புதிய படத்திற்கு “சினம்” எனப் பெயரிடப்பட்டுள்ளது. தேசிய விருது பெற்ற இயக்குநர் GNR குமரவேலன் இப்படத்தினை இயக்குகிறார். குற்றம் 23 எனும் மாபெரும் வெற்றிப்படத்திற்கு பிறகு அருண் விஜய் மீண்டும் போலீஸ் அதிகாரியாக இப்படத்தில் நடிக்கிறார். இப்படம் குற்றம் 23ல் இருந்து முற்றிலும் மாறுபட்ட வேறொரு வடிவத்தில் போலீஸ் கதையை சொல்வதாக இருக்கும் என்கிறது படக்குழு.
சினம் எனும் வலிமை மிகுந்த தலைப்பு பற்றி அருண் விஜய் கூறியதாவது…
எப்போதும் எந்தவொரு விஷயத்திலும் , எந்தவொரு தொழிலும் கோபம் எனும் பண்பு எதிர்மறையானதாகவே அடையாளப்படுத்தப்படும். கோபத்தை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் பலவற்றை கடந்தே பலரும் வந்திருப்போம். ஆனால் இந்தச்சினம் அப்பாடியானதொன்று அல்ல. பலநேரத்தில் கோபமானது பல விசயங்களில் சரியானதாக இருக்கும். தர்மத்தை நிலைநாட்டும் அவசியமான கருவியாக கோபம் இருக்கும். தேவையானவர்களுக்கு நியாயத்தை பெற்றுத்தர சினம் என்பது அவசியமாகவே இருக்கும். இப்படத்தின் கதைநாயகன் அப்படியான சினம் கொண்டவன். இயக்குநர் GNR குமரவேலன் மிக அற்புதமாக இந்தப் பாத்திரத்தை வடிவமைத்துள்ளார். அவரது திட்டமிடலும் திறமையும் வியக்கும்படி உள்ளது. அவரது அபார ஒருங்கிணைப்பில் முதல் நாள் முதல் ஷுட்டிங் வெகு அருமையாக நடந்து வருகிறது. நவமபர் 8 முதல் இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துவங்கவுள்ளது.
Movie Slide Pvt Ltd நிறுவனம் இப்படத்தினை தயாரிக்கிறது. பாலக் லால்வாணி இப்படத்தின் நாயகியாக நடிக்க, நடிகர் காளிவெங்கட் மிக முக்கிய பாத்திரம் ஒன்றில் நடிக்கிறார். நெஞ்சமுண்டு நேர்மையுண்டு, சகா படப்புகழ் சபீர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். கோபிநாத் ஒளிப்பதிவு செய்ய, ராஜா முகமது எடிட்டிங் செய்கிறார். மைக்கேல் கலைஇயக்கம் செய்ய, ஸ்டண்ட் சில்வா சண்டைப்பயிற்சிகளை செய்கிறார். மதன் கார்கி, பிரியா ஏக்நாத் பாடல்களை எழுதுகிறார்கள். பவன் டிசைன் செய்கிறார். படத்தின் விறுவிறுப்பான இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மிகவிரைவில் துவங்கவுள்ளது.