ஒரு காலத்தில் ஒரு வெற்றியையாவது கொடுத்துவிட மாட்டோமா..? என்று போராடிக் கொண்டிருந்தவர் நடிகர் அருண் விஜய். ‘தடையறத் தாக்க’ படத்தை அடுத்து அவர் நடிப்பில் வெளியான ”குற்றம் 23” “தடம்”, “மாபியா” போன்றவை மட்டுமின்றி அவர் வில்லனாகவும் நெகடிவ் கதாபாத்திரத்திலும் நடித்த ‘செக்க சிவந்த வானம்’, ‘என்னை அறிந்தால்’ என்று அனைத்துப் படங்களுமே குற்றப் பின்னணியினை அடிப்படையாகக் கொண்ட படங்கள் தான்.
அந்த வரிசையில் மீண்டும் ஒரு க்ரைம் த்ரில்லர் வகைப்படத்தில் நடிக்க தயாராகி வருகிறார் அருண் விஜய். இப்படத்தை ஈரம், வல்லினம், குற்றம் 23 ஆகிய படங்களை இயக்கிய அறிவழகன் இயக்குகிறார். ரெஜினா கசாண்ட்ரா அருண் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார். ஸ்டெபி படேல், பகவதி பெருமாள் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். சாம். சி.எஸ் ஒளிப்பதிவு செய்கிறார். ஏலியன்ஸ் பிக்சர்ஸ் சார்பாக விஜயராகவேந்திரா தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஆக்ரா, டெல்லி, ஐதராபாத் ஆகிய பகுதிகளில் நடைபெற இருக்கிறது.