“உள்ள வந்தா பவருடி அண்ணன் யாரு தளபதி” போன்ற எக்கச்சக்க பில்டப்புகள் கொடுத்து விட்டு உள்ளே சென்ற பிறகு அல்வா கொடுத்தால் காண்டாகுமா இல்லையா? அதனால் தான் அரண்மனை3 படத்தில் சுந்தர் சி ட்ரைலரில் எந்தப் பில்டப்பும் கொடுக்கவில்லை. படமும் நம்மை பெரிதாக ஏமாற்றவில்லை. அதாவது அரண்மனை 1 போல் அரண்மனை 2 இல்லை அல்லவா? அதே மாதிரி 3யும் இல்லை. ஆனாலும் தான் டார்கெட் செய்துள்ள ஆடியன்ஸுக்கு படம் பிடித்துவிடும் என்பதிலும் மாற்றமில்லை.
கொஞ்சம் காமெடி, லைட்டா க்ளாமர், அவ்வப்போது திரில்லிங் என முந்தைய படங்களின் திரைக்கதை வடிவத்தை இம்மி அளவும் மாற்றாமல் அப்படியே “செய்”து வைத்திருக்கிறார். அவை ஓரளவு எடுபடவும் செய்திருக்கிறது.
கதை? அட ஏங்க…வேற பேச எவ்வளவோ இருக்கு.. படத்தில் இப்படியான கெளரவ கேரக்டரில் நடிக்கும் மன தைரியம் ஆர்யாவிற்கு மட்டுமே வரும். சார்பட்டா படத்தின் லன்ச் ப்ரேக்கில் வந்து நடித்துக் கொடுத்துவிட்டுப் போயிருக்கிறார் போல. ராஷிகண்ணா பயப்பட மட்டுமே பயன்படுத்தப் பட்டிருக்கிறார். கொஞ்சம் க்ளாமருக்கும். சுந்தர் சி அவரது துப்பறியும் கேரக்டரில் அப்ளாஸ் அள்ளுகிறார். ஆண்ட்ரியா கொடுத்த பாத்திரத்திற்கு நிறைவைச் சேர்த்திருக்கிறார். யோகிபாபு மனோபாலா விவேக் கூட்டணி பல இடங்களில் ரகளை செய்திருக்கிறார்கள். (விவேக் நமக்கு நிச்சயமாக பேரிழப்பு)
படத்தின் முன்பாதியில் நடக்கும் சம்பவங்களை பார்க்கும் போது பின்பாதியில் இப்படித்தான் நடக்கும் என முன்னமே யூகிக்க முடிவதால் சுவாரஸ்யம் மிஸ்ஸிங். கேமரா, சிஜி, எடிட்டிங், பின்னணி இசை உள்பட தொழில்நுட்ப ஏரியாக்களில் அதிக கவனம் செலுத்தியிருக்கிறார்கள். சலிப்பு நிறைந்த விசயங்கள் இருந்தாலும் குழந்தைகள் கொண்டாடுவார்கள் என்பதால் குடும்பத்தோடு சென்று ஒருமுறை பார்க்கலாம்!
-மு.ஜெகன் கவிராஜ்