இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தமிழ், இந்தி மற்றும் ஹாலிவுட் படங்களுக்கு இசையமைப்பதோடு அவ்வபோது சமூக விழிப்புணர்வு தொடர்பான பாடல்களுக்கும் இசையமைத்து வருகிறார். நாட்டுப்பற்று தொடர்பாக அவர் இசையமைப்பில் உருவான ‘வந்தே மாதரம்’ பாடல் உலகப்புகழ் பெற்றது. அது போல் பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பு, உலக அமைதி ஆகியவற்றை வலியுறுத்தியும் ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்கள் இசைத்திருக்கிறார்.
அந்த வரிசையில் தற்போது தண்ணீரின் தேவையை வலியுறுத்தி அவர் ஒரு பாடல் இசைக்க உள்ளார். இது குறித்துப் பேசிய ரஹ்மான், “தண்ணீரின் தேவை குறித்தும் அதை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்தும் இன்றைய தலைமுறைக்கு நாம் கற்பிக்க தவறிவிட்டோம். அதை வலியுறுத்தி ’தண்ணீர் சிக்கனம்’ மற்றும் ‘தண்ணீர் தேவை’ ஆகியவற்றை முன்னிறுத்தி ஒரு பாடலை இசைக்க இருக்கிறேன். இது ‘தா ப்யூச்சர்’ அமைப்பின் சார்பாக வெகுவிரைவில் வெளியாகும்..” என்று தெரிவித்துள்ளார்.