நடிகை அனுஷ்கா இந்த ஆண்டோடு தனது திரையுலக பயணத்தில் 15ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார். 2005ம் ஆண்டு தெலுங்கில் பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் “சூப்பர்” என்கின்ற படத்தில் நாகர்ஜூனா ஜோடியாக அனுஷ்கா அறிமுகமானார். அவரின் 15ம் ஆண்டுகால பயணத்திற்கு வாழ்த்து தெரிவித்து அனைவரும் செய்தி அனுப்பி வரும் நிலையில், தெலுங்கின் பிரபல தயாரிப்பாளரான ஷ்யாம் பிரசாத் அனுஷ்காவையும் அவரின் பண்புகளையும் வெகுவாக புகழ்ந்திருப்பதோடு, அனுஷ்காவின் உதவும் மனப்பான்மைக்கு உதாரணமாக ஒரு ஆச்சரிய நிகழ்வையும் பகிர்ந்துள்ளார்.
அதில், ஒரு முறை அவர் ஜார்ஜியா நாட்டிற்கு சென்ற போது, அவரை தெலுங்கு தயாரிப்பாளர் என்பதனை அறிந்து கொண்ட ரஷ்ய கார் டிரைவர் ஷாஷா என்பவர் அவரிடம் அனுஷ்கா பற்றி விசாரித்திருக்கிறார். ஏன்..? என்று கேட்ட போது, “இரண்டாம் உலகம் (தெலுங்கில் வர்ணம்) படப்பிடிப்பின் போது ரஷ்யாவில் ஷாஷா தான் அனுஷ்காவிற்கு கார் ஓட்டியதோடு பாதுகாப்புப் பணியையும் செய்ததாகவும், ஒரு நாள் காருக்கான பைனான்ஸ் தொகை கட்டாததால், தனது கார் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், இதனை அறிந்த அனுஷ்கா படப்பிடிப்பு முடிந்து ரஷ்யாவில் இருந்து கிளம்பும் முன்னர் அவருக்கு ஒரு புதிய கார் வாங்கி பரிசளித்ததாகவும் தெரிவித்திருக்கிறார். அனுஷ்காவின் இந்த உதவும் மனப்பான்மை இத்தனை ஆண்டுகள் கழித்து தற்போது வெளி உலகிற்கு தெரிய வந்திருக்கிறது. இதனையறிந்து பலரும் அனுஷ்காவை பாராட்டி வருகிறார்கள்.