கொரோனா வைரஸ் தொடர்பாக நாள்தோறும் பல நிகழ்வுகள் நடந்த வண்ணம் இருக்கின்றன. அந்த நிகழ்வுகளில் நம்மை அதிர்ச்சியூட்டும் நிகழ்வுகள் ஒரு ரகம் என்றால், நம்மை ஆனந்தப்பட வைக்கும் நிகழ்வுகள் மற்றொரு ரகம். அப்படி ஆனந்தப்பட வைக்கும் வகையிலான ஒரு நிகழ்வு சமீபத்தில் நடந்து உள்ளது. இந்த நிகழ்விற்கு சொந்தக்காரர் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த ஆம்புலன்ஸ் டிரைவர் பாண்டித்துரை. இவர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை சென்னை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரும் ஆம்புலன்ஸில் டிரைவராக பணியாற்றுகிறார். கொரோனா அச்சுறுத்தல் தொடர்பான அதிர்ச்சியில் இருக்கும் அவரது பெற்றோருடனான போன் உரையாடலின் ஆடியோ சமீபத்தில் வெளியானது. அதில் அவரின் பெற்றோர்கள் கொரோனா அச்சத்தால் அவரை பணிக்கு செல்ல வேண்டாம் என்று கெஞ்சுகின்றனர். அவரோ நாடு என்னவாவது..? என்று கூறி பணிக்கு செல்லுவேன் என்கிறார். இந்த ஆடியோ வாட்ஸ் அப்பில் அதிகமாக பகிரப்பட்டு வந்தது. இதைக் கண்ட நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனருமான கமல்ஹாசன், இது தொடர்பாக ட்விட்டரில் கூறி இருப்பதாவது, “108 ஆம்புலன்ஸ் டிரைவர் பாண்டித்துரை நீங்கள் தான் என் நம்பிக்கை நாயகன். இது போன்று தன்னலம் பார்க்காது நாட்டிற்காக முன்னிற்கும் வீரர்கள் தான் இந்த தேசத்தை இயக்குபவர்கள். பாசத்தில் அவரின் பெற்றோர்களின் குரல் உள்ளத்தை உலுக்க, என் நாடு என்ன ஆவது..? என்று கேட்கும் அந்த மனம் தான் கடவுள்” என்று பதிவிட்டுள்ளார்.