“தனுஷு ராசி நேயர்களே” படத்தில் அனிருத்தின் மெலடி !
இன்றைய தமிழ் சினிமா இசை உலகின் இளமை அடையாளமாக வெற்றி நாயகனாக வலம் வருபவர் அனிருத். தொடர் ஹிட் ஆல்பங்களை தந்துவரும் அவர் தன் குரல் மூலமும் அனைவரையும் கவர்ந்து வருகிறார். இளம் தலைமுறையினர் அவர் குரலினை கொண்டாடி வருகின்றனர். மெலடி, ராப் என எந்தவகை இசைக்கும் ஒத்துப்போகக் கூடிய குரல் அவருடையது. அவர் குரல் உலகம் முழுதும் ரசிகர்களை ஈர்க்கக்கூடியதாய் இருக்கிறது. தற்போது அனிருத் புதுமுக இயக்குநர் சஞ்சய் பாரதி இயக்கும் ஹரீஷ் கல்யாணின் “தனுசு ராசி நேயர்களே” படத்தில் ஒரு இளமை துள்ளும் பெப்பி மெலடி ஒன்றை பாடியிருக்கிறார்.
இது பற்றி இசையமைப்பாளர் ஜிப்ரான் கூறியதாவது…
கொண்டாட்டம், குத்துப்பாடல், காதல் பாடல், சோகப்பாடல் என
எந்த ஒரு சூழலை எடுத்துக்கொண்டாலும் அனிருத் அங்கே பொருந்தக்கூடிய திடகாத்திர குரல் கொண்டவராக இருக்கிறார். அவர் தன் குரலால் பாடல் வரிகளில் மாயாஜாலம் நிகழ்த்தி பாடலை அடுத்த நிலைக்கு எடுத்து சென்றுவிடுகிறார். அவருடைய அத்தனை ஆல்பத்திலும் அவர் பாடிய பாடல்களிலும் தனித்தன்மையை கண்டிருக்கிறேன். எனது சிக்சர் அவர் பாடிய பாடலுக்கு பிறகு மீண்டும் எனது ஸ்டூடியோவில் அவர் குரலை பாடல் பதிவு செய்ததில் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறேன். இப்பாடல் கதையின் முன்னணி பாத்திரம் தன் வாழ்வின் சரியான துணையை தேடி பாடும் பாடலாக படத்தில் வருகிறது. கு. கார்த்திக் மிக எளிமையாகவும் அதே நேரம் எளிதில் ரசிகர்களை ஈர்க்கும் வரிகளில் பாடலை எழுதியுள்ளார். இப்பாடல் உருவாகிய மொத்த தருணமும் கொண்டாட்டமானதாக இருந்தது. ரசிகர்களும் பாடலை அதே போல் கொண்டாடுவார்கள் என நம்புகிறேன்.
ஶ்ரீ கோகுலம் மூவிஸ் சார்பில் கோகுலம் கோபாலன் தயாரிக்கும் இப்படத்தினை புதுமுக இயக்குநர் சஞ்சய் பாரதி இயக்குகிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார். “தனுஷு ராசி நேயர்களே” படத்தலைப்பை போலவே ராசியை நம்பும் ஒரு இளைஞன் வாழ்வில் அதனால் ஏற்படும் பிரச்சனையும் அதனை தொடர்ந்த அதிரடி சம்பவங்களும் காமெடியாக சொல்லப்பட்டிருக்கிறது. குடும்பத்துடன் கொண்டாடும் கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகி வருகிறது.
ஹரீஷ் கல்யாண் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் ரெபா மோனிகா ஜான் மற்றும் டிகங்கனா சூர்யவம்சி ஆகிய இரு நாயகிகளும் மிளிரும் நடிப்பை வழங்கியுள்ளார்கள்.
படத்தின் ஷீட்டிங் முடிவுற்ற நிலையில் போஸ்ட் புரடக்ஷன் பணிகள் தற்போது நடந்து வருகிறது. மிக விரைவில் இசை மற்றும் டிரெயலர் வெளியீடு பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும்.