தகப்பனின் விரல் பிடித்து வந்த குழந்தை திருவிழா கூட்டத்தில் தொலைந்து போனால் பெற்றவனுக்குள் எப்படி ஒரு பதைபதைப்பு வருமோ…அப்படியொரு உணர்வைத் தந்து முடிவில் மகிழ்ச்சியாக எழ வைத்திருக்கும் படம் அன்பிற்கினியாள்.முதலில் ஒரே வரியில் சொல்லிவிடுகிறோம். பெயர் போலவே படம் அட்டகாசமாக இருக்கிறது.
கதைப்படி நாயகி கீர்த்திபாண்டியனுக்கு கனடா செல்ல வேண்டும் என்பது கனவு. தன் அப்பா அருண்பாண்டியனின் வருமானம் மட்டும் அதற்குப் போதாது என்பதால் பகுதி நேரவேலையாளாக பெரும் வணிகவளாகத்தில் உள்ள காஸ்ட்லி ரெஸ்டாரெண்ட் ஒன்றில் வேலை செய்கிறார் கீர்த்திபாண்டியன். அவருக்கு ஒரு காதலரும் உண்டு. அந்தக்காதல் மூலம் கீர்த்திபாண்டியனுக்கும் அருண்பாண்டியனுக்கும் சின்ன முரண்பாடு வரும் சூழலை ஒரு போலீஸ் அதிகாரி ஏற்படுத்தி விடுகிறார். அதன்பின் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகும் கீர்த்தி அன்றிரவே பெரும் ஆபத்து ஒன்றில் சிக்குகிறார். அதில் இருந்து அவர் எப்படி மீண்டார் என்பதே அன்பிற்கினியாள் தரும் அனுபவம்!
மலையாளத்தில் வெளியாகி பெரும் வெற்றியைப்பெற்ற ஹெலன் என்ற படத்தின் ரிமேக் தான் அன்பிற்கினியாள். மலையாள ஹெலன் படத்தின் நாயகி நல்ல நடிப்பை கொடுத்திருந்ததால் கீர்த்தி எப்படி நடிப்பாரோ என்ற தயக்கம் படம் துவங்கும் வரையில் இருந்தது. ஆனால் கீர்த்திபாண்டியனின் ஒவ்வொரு ரியாக்ஷன்ஸும் படத்தை காத்திரமாக தாங்கிப்பிடித்துள்ளது. குறிப்பாக ஒரு ப்ரீசர் அறைக்குள்ளே தனியாளாக அவர் கடக்கும் அந்த இரவுநேர திகுதிகு காட்சிகளை தன் நடிப்பின் மூலமே தூக்கி நிறுத்தியிருக்கிறார் கீர்த்தி. சபாஸ்!
அருண்பாண்டியன் ஒரு தந்தையை கண்முன் கொண்டு வர பெரும் முயற்சி எடுத்து வெற்றி அடைந்திருக்கிறார். கீர்த்திபாண்டியனின் காதலராக வரும் பிரவீனுக்கு இப்படம் நல்வரவு. படத்தின் இயக்குநர் கோகுல் ஒரு காட்சியில் வந்தாலும் மாஸ் காட்டியிருக்கிறார். போலீஸ் இன்ஸ்பெக்டர், ரெஸ்டாரண்ட் மேனஜர், வளாகத்தின் வாட்ச்மேன் என சின்ன சின்ன கேரக்டர்கள் கூட மிக அழகாக கவனம் ஈர்க்கிறார்கள்.
படத்தின் மேக்கிங் எந்த இடத்திலும் ஒரிஜினலின் தாக்கத்தை குறைக்கவே இல்லை. அதற்கு மிக முக்கியமான காரணம் மகேஷ் முத்துசாமியின் தரமான ஒளிப்பதிவு. சின்ன சின்ன ஷாட்களையும் மிக நுண்ணியமாக படம் பிடித்து படத்தின் உணர்வை நமக்குள் கடத்தியிருக்கிறார். ஜாவித்தின் பின்னணி இசை படத்தின் முக்கியமான ஆன்மா! எடிட்டிங் உள்பட எல்லா டெக்னிஷியன்ஸும் அசத்தி இருக்கிறார்கள்.
படத்தின் முதல் 15 நிமிடம் மெதுவாக நகர்ந்தாலும் பின்பாதியில் வரும் எமோஷ்னல் காட்சிகளுக்கு அதுதான் அடித்தளமாக இருக்கிறது. மேலும் குட்டி குட்டி ஐடியாக்களை அழகாக படத்தில் புகுத்தியிருந்தது இயக்குநரின் புத்திசாலித்தனம்!ஆபத்து என்பது எந்த நேரத்தில் எப்படி வேண்டுமானாலும் வரலாம். அதை அந்தந்தச் சூழலில் கிடைக்கும் ஆயுதங்களை வைத்து வென்றெடுக்க வேண்டும். அன்பிற்கினியாள் அப்படி வென்றெடுத்திருக்கிறாள்!
-மு.ஜெகன்சேட்