Tamil Movie Ads News and Videos Portal

லாபம்- விமர்சனம்

எப்போதும் உழைக்கும் பாட்டாளி வர்க்கத்தின் பக்கம் நின்று அவர்களுக்கான நியாயத்தைப் பேசும் படங்களைத் தான் தருவார் இயக்குநர் எஸ்.பி ஜனநாதன்..அவரின் இறுதி படைப்பு லாபம். தமிழ் சினிமாவிற்கோ அவரது இழப்பு பெரும் நஷ்டம்..ஒரு படத்தின் லாபம் ஒரு சமூகத்தின் லாபமாக மாறுவது தான் உண்மையான வெற்றி. அந்த வெற்றிக்கான அம்சத்தை தன்னகத்தே கொண்டுள்ளது லாபம் திரைப்படம்.

பெருவயல் என்ற கிராமத்தை பசுமையாக்கி விவசாயிகளுக்கு உழைப்பிற்கான அறுவடையைப் பெற்றுத்தர முனைகிறார் நாயகன் விஜய்சேதுபதி. அதே கிராமத்தைச் சேர்ந்த பெரு முதலாளி ஜெகபதி பாபு நிலத்தை அபகரித்து ஒரு ஆலை கொண்டு வர நினைக்கிறார். மக்கள் நிலத்தை மீட்டெடுத்து ஜெகபதிபாபுவின் சூழ்ச்சியை எப்படி விஜய்சேதுபதி முறியடிக்கிறார் என்பதே லாபம்.

விஜய்சேதுபதியின் பெரிய தனித்துவமே அவரது இயல்பான உடல்மொழி தான். அது லாபத்திலும் லாபகரமாக பொருந்தி இருக்கிறது. விவசாயி பக்கிரியாக ஈர்க்கிறார் வி.ஜே. நாயகி ஸ்ருதிஹாசன் நடன கலைஞராக வருகிறார். ஜெகபதி பாபு ஒரு கார்ப்பரேட் முதலையை கண்முன்னே கொண்டு வருகிறார்..டி.இமானின் பின்னணி இசையும் பாடல்களும் கம்யூனிச ஓசையை உயர்த்திப் பிடிக்கிறது. செழுமையான ஒளிப்பதிவும் படத்திற்கு வளமை சேர்த்துள்ளது..

சில பாடங்கள் வாழ்விற்கு மிக முக்கியமானதாக இருக்கும். அதை கற்றுக் கொள்வதில் மிகுந்த சிரமம் இருக்கும். அது கற்பவர்களின் குறைபாடு அல்ல..கற்றுத்தருபவர்களின் குறைபாடு. எதையும் எளியமுறையில் சொல்லித்தரவேண்டும். சுருங்கச் சொல்லல் விளங்க வைத்தல் என்பது தான் தமிழின் ஆகப்பெரும் இலக்கணம். அந்த இலக்கணத்தை எளியமுறையில் திரையில் கையாண்டுள்ளார் இயக்குநர் ஜனநாதன்.

அடுத்தடுத்த காட்சிகளுக்கான விறுவிறுப்பை இப்படியான சோசலிச படங்களில் அமைப்பது கடினம். அதையும் அழகாக செய்திருக்கிறார்கள்.சிலபல லாஜிக் கேள்விகள் துருத்தி நின்றாலும் இந்தப்படம் பார்த்தே ஆகவேண்டிய பாடம்.
-மு.ஜெகன் கவிராஜ்