குறைந்த பட்ஜெட்டில் இவ்வளவு கலகலப்பான வெப்சீரிஸை கொடுக்க முடியுமா? என்ற கேள்விக்கு…sure ah கொடுக்கலாம் என்று சொல்லியிருக்கிறது அம்முச்சி2 சீரிஸ்
கோவை மாவட்டம் கோடாங்கி பாளையத்தில் நாயகி மித்ராவை அவரது பட்டிக்காட்டு அப்பா படிக்க விடாமல் முரடன் ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுக்கிறார். இதை அறிந்த மித்ராவின் காதலரான அருண் சென்னையில் இருந்து கோவை செல்கிறார். மித்ராவை கல்யாணப்பிடியில் இருந்து மீட்டெடுக்க..அருண்+ அவரது கோவை நட்புக்கூட்டணி என்னவெல்லாம் செய்கிறது என்பதே அம்முச்சி2 வின் கதை
இந்த சீரிஸின் பலமே கோவை வட்டாரமொழி வசனங்களும் அதை இயல்பாகப் பேசி நடித்துள்ள நடிகர்களும் தான். அருண் மித்ரா துவங்கி யாருமே சோடை போகவில்லை. சின்னச் சின்ன கேரக்டர்களும் கூட கிடைக்கிற கேப்பில் ஸ்கோர் செய்துவிடுகிறது.
தரத்தில் பெரிய மெனக்கெடல் இல்லாவிட்டாலும் குறைந்த பட்ஜெட் என்பதை துருத்தித் தெரியாத அளவிற்கு செய்திருக்கிறார் இயக்குநர் ராஜேஸ்வர் காளிசாமி. விவேக் சாராவின் பின்னணி இசை கதைக்களத்தோடு பிணைந்திருப்பது பலம். சந்தோஷ்குமார் SJ ஒளிப்பதிவில் தனிக்கவனம் செலுத்தியுள்ளார். ரேக்ளாரேஸ் காட்சியும் சிலம்புச் சண்டைக்காட்சியும் நல்ல ஆங்கிளில் எடுக்கப்பட்டுள்ளது
சிற்சில இடங்களில் சிறிய சோர்வுத்தன்மை ஏற்பட்டாலும் பின்பாதி சீரிஸில் சிரிப்பு 100% கியாரண்டி என்பதால் நிச்சயமாக இந்த சீரிஸை க்ளிக் செய்யலாம்
-மு.ஜெகன் கவிராஜ்