வெகுஜன சினிமாக்களுக்கு மத்தியில் வெகுவாக கவனிக்கப்பட வேண்டிய படங்களும் வரத்தான் செய்கின்றன. இன்றைய சமூகம் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு படத்தை சிலபல சமரசங்களோடு இயக்கியிருக்கிறார் இயக்குநர் ராஜாஜி
அதிகாரத்தை ருசித்துப் பழகியவர்களிடம், குறிப்பாக மக்களை ஒடுக்கியும் அடக்கியும் ருசித்துப் பழகியவர்களிடம் கருணை என்பதே இருப்பதில்லை. அப்படியானவர்கள் சமூகப்படி நிலைகளில் கீழான நிலையில் இருப்பவர்களை எந்த விதத்திலும் மேலே வரவிடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பார்கள். அப்படித் தான் இந்தப்படத்தில் இரு பண்ணையார்கள் கவனமாக இருக்கிறார்கள். ஒரு தாழ்த்தப்பட்ட சிறுவன் திருவிழாவில் விபூதியை தானே எடுத்துக்கொண்டதிற்காக அவனை இரு பண்ணையார்களின் குருப் கொலை செய்துவிடுகிறார்கள். அந்த கொலைக்கான நீதி கிடைத்ததா? சமூகநீதி என்பது இன்று சமூகத்தில் எந்த அளவிற்கு இருக்கிறது? ஆகிய கேள்விகளுக்கு படம் விரிவான திரைக்கதை மூலம் பதில் அளிக்கிறது
இந்தப்படத்தில் நடித்துள்ள அத்துணை நடிகர்களும் நாமறிந்த எதோ ஒரு முகத்தை நினைவூட்டுகிறார்கள். பண்ணையாராக வரும் பிரபு மாணிக்கம் நல்ல நடிப்பை வழங்கியுள்ளார். பண்ணையாரின் அடியாட்களாக மதன், ரமேஷ் மித்ரன் இருவருமே எதார்த்தம் மீறாத நடிப்பால் கவர்கிறார்கள். விக்ரம், சங்ககிரி மாணிக்கம், ஷர்ஷிதா ஆகியோர் தங்களின் நல்ல நடிப்பால் கவனிக்க வைக்கிறார்கள். குழந்தை நட்சத்திரம் லோகிதன் தனித்துத் தெரிகிறார். அனைவருமே இயல்பாக நடித்துள்ளது படத்திற்கு பலமாக அமைந்துள்ளது.
பண்ணையார், அவரின் கூலிகள், பாதிக்கப்படும் சிறுவன், வயல்வேலை செய்யும் கூலிகள் என ஒவ்வொரு கதாப்பாத்திரங்களும் தெளிவாக எழுதப்பட்டுள்ளது
இப்படத்தின் முதல் ஹீரோவாக கேமராமேனைச் சொல்லலாம். நேர்த்தியான ஒளிப்பதிவால் நம் கண்களுக்கு விருந்தளிக்கிறார். செம்மண் புழுதி மேல் எழுந்து பறக்கும் புறாக்களுக்கு ஒரு ஷாட் வைத்துள்ளார் அருமை. ஜேம்ஸ் வசந்தன் பின்னணி இசையில் கதையின் கனத்தை நமக்குள் கடத்துகிறார். அந்தோணி தாசன் பாடல்களுக்கான இசையை வழங்கியுள்ளார். நேட்டிவிட்டி மாறாத அவரது இசை வசீகரிக்கிறது.
படத்தின் முதல் காட்சியிலே அதிகார வர்க்கத்தின் கோரமுகத்தை இயக்குநர் மிக நுட்பமாக காட்டுகிறார். மாடு வளர்த்து நாம் வாழ்வை வளர்க்கலாம் என்றெண்ணும் ஒரு தலித் குடும்பத்தின் கனவை சாதித்திமிர் பிடித்தவர்கள் சிதைக்கும் அந்தக் காட்சி ரணம். சின்னச் சின்ன கேரக்டர்கள் மூலம் வலியுணர்த்தும் காட்சி அமைப்புகளும் படத்தை உயிரோட்டமாக வைத்துள்ளது. முழுக்க முழுக்க கருத்தியல் சார்ந்த படம் என்பதால் கமர்சியல் மேக்கிங் மிஸ்ஸிங் என்றாலும் இந்தப்படத்தை பார்க்க வேண்டியது அவசியம். வெறும் பாடத்தை படமாக எடுக்காமல், படத்திற்குள் வலிந்து திணிக்காமல் சமூகநீதி பாடத்தை புகுத்தியிருப்பது பாராட்டுக்குரியது. சமூகநீதியை திரையில் பேசும் கலைஞர்களை வரவேற்போம்
-மு.ஜெகன் கவிராஜ்