Tamil Movie Ads News and Videos Portal

அம்பேத்கருக்குப் பிந்தைய தலித் இயக்கங்கள் ஒரு புத்தகம்/ ஒரு பார்வை

அம்பேத்கரில் சில வடிவங்கள் உண்டு. ஜனநாயகப்புரட்சியை விரும்பும் அம்பேத்கர், புத்தமதம் போதித்த ஒழுக்கம் மற்றும் பொருளாசை துறத்தல் ஆகியவற்றை விரும்பும் அம்பேத்கர், சோஷலிசப் புரட்சி என்பது “மக்கள் வன்முறை”க்கு வழிகாட்டும் என்று உணர்ந்த அம்பேத்கர், அரசை எதிர்த்து செய்யும் புரட்சியை விட அதிகாரம் வழி அரசிடம் திணித்து செய்யும் புரட்சி நல்லவைக்கு வழிகோலும் என நம்பிய அம்பேத்கர் என அம்பேத்கர் பலவகை உண்டு.

புத்தமதம், ” உலகம் மாறிக்கொண்டே இருக்கும்” என்ற எதார்த்தத்தை போதித்த மதம். அதை அம்பேத்கர் அதிகம் விரும்பினார். அதனால் அவரது பல கொள்கைகளை மறு உருவாக்கம் செய்வதை அம்பேத்கருக்கு நிந்தனை செய்வதாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்று இந்த நூல் போதிக்கிறது. அம்பேத்கரின் வாழ்வு, வாசிப்பு, போராட்டம், அரசியல் பங்கெடுப்பு, ஆன்மிக முன்னெடுப்பு உள்ளிட்ட அம்பேத்கரின் அனைத்து செயல்பாடுகளையும் முற்றாக வாசித்து ஆய்ந்தவர் இந்நூல் ஆசிரியர் ஆனந்த் டெல்டும்ப்டே. அவரது ஆழ்ந்த ஆய்வு ஐந்து கட்டுரைகளிலும் அட்டகாசமாக வெளிப்பட்டுள்ளது. அம்பேத்கர் தான் நினைத்து செயலாற்றியதை தனக்குப் பின் வந்த தலித்திய தலைவர்கள் மற்றும் பிள்ளைகள் இயக்கங்கள் செயலாற்றவில்லை என்ற வருத்தம் கொண்டாதாக நூல் கூறுகிறது. மேலும் ஆளும் வர்க்கம் தன்னையும் சரியாகச் செயல்பட வைக்கவில்லை என்றும் அரசியல் அமைப்புச் சட்டம் தனக்கு முழு நிறைவு தரவில்லை என்ற அம்பேத்கரின் வருத்தமும் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தனக்குத் தேவையானதை தன்னை வைத்தே தர விடாமல் செய்வதில் ஆளும் வர்க்கத்திற்கு நிகர் ஏதுமில்லை..அம்பேத்கருக்கும் அப்படியான விபத்து நடந்துள்ளது என்பதை நூல் சுட்டுகிறது. ஆளும் வர்க்கம் எப்படியும் தலித் மக்களை ஒன்றிணைந்து ஆதிக்கத்திற்கு எதிராக போராட விடவேவிடாது. அந்தப் போராட்டத்திற்கு தடையாக தலித் மக்களையும், ஏன் அம்பேத்கரையும் கூட துணைக்கு இழுத்துக்கொள்ளும். இந்த இடத்தில் அம்பேத்கரின் சில கொள்கைகளை தளர்த்துக் கொண்டு தலித் மக்கள் தங்கள் வளர்ச்சிக்கு உட்படுத்த வேண்டும் என்கிறார் நூலாசிரியர். அம்பேத்கரை தெய்வமாக மாற்றும் சடங்கில் போய் விழுந்துவிட்டு, அம்பேத்கரை யாகத்தில் தள்ளிவிடுவது ஆபத்து தானே!

மேலும் பொருள்முதல் வாதம் முதல் சோஷலிசம் வரை மார்க்சியத்தோடு அம்பேத்கர் முரண்பட்டு நின்றதையும் தோழமையோடு சுட்டுகிறது நூல். நிச்சயமாக அம்பேத்கர் இப்போதிருந்தால் அவரது செயல்பாடுகளில் நிறைய மாற்றத்தைக் கொண்டு வந்திருப்பார் என்ற ஏக்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளது .

கடந்த பத்தாண்டுகளில் தலித் சமூகம் அரசியல் ரீதியாக எந்த பெரிய எல்லையையும் அடையவில்லை என்றும், பெரும் தேக்கத்தை அவர்கள் அடைந்துள்ளதிற்கு காரணம் சிறந்த தலைவர்கள் சிறந்த இடத்திற்குச் சென்ற உடன் தலித் அடையாளங்களை மறந்து விடுகிறார்கள் என்றும் நூலாசிரியர் வாதம் வைக்கிறார்.

தன் வாழ்வு மொத்தத்தையும் தலித் இனத்தின் வளர்ச்சிக்கு மட்டும் அல்லாது ஒடுக்கப்படும் எல்லா இனத்தவர்க்குமாக ஒப்படைத்தவர் அம்பேத்கர். அப்படியான ஒரு தலைவரின் வாழ்நாள் ஏக்கத்தையும் வாழ்நாள் உழைப்பையும், தியாகத்தையும் சொல்வதோடு, அவரது வழித்தோன்றல்கள் எதையெல்லாம் தொட வேண்டும் விடவேண்டும் என்று போதிக்கிறது நூல்..
Good one❤️

#அம்பேத்கருக்குபிந்தையதலித்இயக்கங்கள் #ஆனந்த்தெல்தும்ப்டே