Tamil Movie Ads News and Videos Portal

அமேசானின் அடுத்த அதிரடி! 9 படங்கள் வெளியீடு

அடுத்த 3 மாதங்களுக்கு அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகும் படங்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா அச்சுறுத்தலால் திரையுலகம் கடும் பொருளாதார இழப்பைச் சந்தித்து வருகிறது. திரையரங்குகள் திறக்கப்படாத காரணத்தால் பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்கள் எதுவுமே வெளியாகவில்லை. தங்களுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்தைச் சரி செய்ய, வெளியீட்டுக்குத் தயாராகவுள்ள படங்களை ஓடிடி தளத்தில் வெளியிட்டு வருகிறார்கள்.

இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி முன்னணி ஓடிடி நிறுவனங்களும் போட்டி போட்டி படங்களின் உரிமையைக் கைப்பற்றி வருகிறார்கள். ‘பொன்மகள் வந்தாள்’, ‘பெண்குயின்’, ‘நிசப்தம்’, ‘குலாபோ சித்தாபோ’ உள்ளிட்ட பல படங்களை வெளியிட்ட அமேசான் நிறுவனம், தங்களுடைய அடுத்தகட்ட படங்கள் வெளியீட்டை அறிவித்துள்ளது.

அக்டோபர் 15 – ஹலால் லவ் ஸ்டோரி (மலையாளம்)

சகாரியா முகமது இயக்கத்தில் உருவாகியுள்ள நகைச்சுவைத் திரைப்படம் ‘ஹலால் லவ் ஸ்டோரி’. இதில் இந்திரஜித் சுகுமாரன், ஜோஜு ஜார்ஜ், ஷரஃப் யு தீன், கிரேஸ் ஆண்டனி மற்றும் சவுபின் ஷாஹிர், பார்வதி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அக்டோபர் 29 – பீமா சேனா நளமஹராஜா (கன்னடம்)

கார்த்திக் சரகூர் இயக்கிய குடும்பப் பொழுதுபோக்குத் திரைப்படம் ‘பீமா சேனா நளமஹராஜா’. இதில் அரவிந்த் ஐயர், ஆரோஹி நாராயண், பிரியங்கா திம்மேஷ், ஆச்சியுத் குமார் மற்றும் ஆத்யா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அக்டோபர் 30 – சூரரைப் போற்று (தமிழ்)

சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியாகவுள்ள படம் ‘சூரரைப் போற்று’. இதில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, மோகன் பாபு, பரேஷ் ராவல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை சூர்யாவின் 2டி நிறுவனமும், குனீத் மோங்காவும் இணைந்து தயாரித்துள்ளனர். இந்தப் படம் ஏர் டெக்கான் நிறுவனர் கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 13 – சலாங் (இந்தி)

ராஜ்குமார் ராவ், நுஷ்ரத் பாருச்சா நடிப்பில் ஹன்சல் மேத்தா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சலாங்’. ஒரு உயிர்ப்பூட்டும் சமூக நகைச்சுவைக் கதை. இதை பூஷன் குமார் வழங்க அஜய் தேவ்கன், லுவ் ரஞ்சன் மற்றும் அங்கூர் கார்க் ஆகியோர் தயாரித்துள்ளனர்.

நவம்பர் 19 – மன்னே நம்பர் 13 (கன்னடம்)

விவி கதிரேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள த்ரில்லர் படம் ‘மன்னே நம்பர் 13’. கிருஷ்ணா சைதன்யாவின் ஸ்ரீ ஸ்வர்ணலதா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் வர்ஷா பொல்லம்மா, ஐஸ்வர்யா கவுடா, பிரவீன் பிரேம், சேதன் காந்தர்வா, ரமணா மற்றும் சஞ்சீவ் ஆகியோர் நடித்துள்ளனர்.

நவம்பர் 20- மிடில் கிளாஸ் மெலடிஸ் (தெலுங்கு)

ஆனந்த் தேவரகொண்டா, வர்ஷா பொல்ம்மா ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மிடில் கிளாஸ் மெலடிஸ்’. ஒரு ஹோட்டலைச் சொந்தமாக்க வேண்டும் என்ற கனவோடு கிராமத்தில் நடுத்தர வாழ்க்கையை வாழும் இளைஞனின் வாழ்க்கையை நகைச்சுவையாகச் சித்தரிக்கிறது. இந்தப் படத்தை வினோத் அனந்தோஜு இயக்கியுள்ளார்.

டிசம்பர் 11 – துர்காவதி (இந்தி)

இது அனுஷ்கா நடிப்பில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘பத்மாவதி’ படத்தின் இந்தி ரீமேக். அசோக் இயக்கத்தில் பூமி பெட்னேகர் நடித்துள்ளார். ‘துர்காவதி’ என்று பெயரில் உருவாகும் இந்தப் படம், பெரியசக்திகளின் சதித்திட்டத்திற்குப் பலியாகும் ஒரு அப்பாவி அரசாங்க அதிகாரியின் கதையைச் சொல்கிறது. இப்படத்தை டி-சீரிஸ், கேப் ஆஃப் குட் பிலிம்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன.

டிசம்பர் 17 – மாறா (தமிழ்)

மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘சார்லி’ படத்தின் தமிழ் ரீமேக். திலீப் குமார் இயக்கத்தில் மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். முழுக்க காதலை மையப்படுத்தி உருவாகியுள்ளது. பிரமோத் பிலிம்ஸின் ஸ்ருதி நல்லப்பா மற்றும் பிரதீக் சக்ரவர்த்தி ஆகியோர் தயாரித்துள்ளனர்.

டிசம்பர் 25 – கூலி நம்பர் 1 (இந்தி)

பூஜா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் பிரபலமான ‘கூலி நம்பர் 1’ படத்தைத் தழுவி எடுக்கப்பட்ட ஒரு குடும்ப நகைச்சுவைப் படம். டேவிட் தவான் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் வருண் தவான், சாரா அலி கான், பரேஷ் ராவல், ஜாவேத் ஜாஃப்ரி, ஜானி லீவர், ராஜ்பால் யாதவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.