“உச்சிமீது வானிடிந்து வீழ்கின்ற போதிலும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே” என்ற பாரதியார் வரிகளின் ஆகச்சிறந்த சான்று ராணுவ வீரர்கள் தான். தமிழ் மறம் கொண்ட ராணுவ வீரர் முகுந்த் வரதராஜன். புல்வாமா போரில் உயிர்விட்ட, ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் போர் வாழ்வும் காதல் வாழ்வுமாக வெளியாகியுள்ளது அமரன் படம். போர் காட்சிகளை விட, வீரியமும், அழுத்தமும் நிறைந்துள்ளது அன்புக் காட்சிகள். படம் நிறைவடையும் போது கண்கள் நிறைந்து போவது உறுதி. வாழ்க்கை வரலாறு தான் படம் என்பதால், கதைப் பற்றிச் சொல்வதை விட, படம் தந்த அனுபவம் பற்றிச் சொல்வதே சிறந்ததாக இருக்கும்
எல்லா மனிதர்களுக்கும் ஒரு ராணுவ வீரரின் தொடர்பு இருக்கும். அதனால் அவர்களின் வாழ்வு நமக்குள் ஓர் கனெக்டிங்-ஐ ஏற்படுத்தவே செய்யும். அந்த வகையில் இந்த அமரன், படத்தின் துவக்கத்திலே நமக்குள் வந்துவிடுகிறான்
சமர்க்கு அஞ்சாத முகுந்த் வரதராஜனாக சிவகார்த்திகேயன். மனிதர் ஒரிஜினலை பிரதி எடுக்காமல் ஒரிஜினலாகவே மாறியுள்ளார். ஆக்சன் காட்சிகளில், காதல் காட்சிகளில், எமோஷ்னல் காட்சிகளில் எல்லாம் SK அசரடித்துள்ளார். படத்தின் ஆன்மாவாக இருக்கிறார் சாய் பல்லவி. என்னவொரு நடிப்பு! காதலியாக, மனைவியாக, கணவனின் வருகைக்காக தவிக்கும் போது சிறு குழந்தையாக சாய் பல்லவி தனது கரியரின் உச்சமாக நினைத்து இப்படத்தில் வாழ்ந்துள்ளார் கிரேட். சிவகார்த்திகேயன் அப்பா, அம்மா, மாமனார்,மாமியார் உள்ளிட்ட கேரக்டர்களும் நன்றாக நடித்துள்ளனர்
ராணுவ வீரர்களுக்கும் தீவிரவாதப் போராளிகளுக்கும் நடக்கும் சண்டைகளை உண்மைக்கு நெருக்கமாக காட்சிப்படுத்தியுள்ளார் ஒளிப்பதிவாளர். 1983-முதல் 2014 வரை நடக்கும் கதையில் கேமராவும் ஒரு ரோல்ப்ளே செய்துள்ளது. உயிரோட்டமுள்ள இப்படத்தின் திரைக்கதைக்கு எக்ஸ்ட்ரா மைலேஜ் கொடுத்துள்ளார் ஜி.வி பிரகாஷ். பின்னணி இசை ஆகத்தரமாக அமைந்துள்ளது. எங்கே இசைக்காமல் விட வேண்டும் என்று அறிந்து வைத்துள்ளார். அது படத்திற்குள் பெரும் அதிசயத்தை நிகழ்த்துகிறது. குறிப்பாக க்ளைமாக்ஸில் சாய்பல்லவிக்கு வரும் ஒரு போன்காலில் ஜி.வி செய்திருப்பது எமோஷ்னல் மேஜிக்
மூன்று மணி நேரம் அருகில் ஓடக்கூடிய படம் என்றாலும், தொய்வே ஏற்படாமல் படத்தை நகர்த்திச் சென்றுள்ளார் இயக்குநர். போலியான எமோஷ்னலோ, நெஞ்சை நக்கும் தேசப்பற்றோ எதுவுமில்லாமல் கதை வெகு இயல்பாக பயணிக்கிறது. ராணுவ வீரர்கள் அனைவரும் அன்பே சிவம் படம் பற்றிப் பேசிச்செல்லும் ஒரு காட்சி க்ளாசிக்
தீபாவளிக்கு நல்லபடம் பார்க்க வேண்டும் என்ற முடிவெடுத்தால், அமரன் ஓடும் தியேட்டர்க்குச் செல்லுங்கள்
4/5
-தமிழ் வெண்பா