தொடர்ச்சியான ஊரடங்கு உத்தரவினால் பல தொழில்கள் முடங்கியிருப்பதைப் போல் சினிமாத் தொழிலும் முடங்கிப் போயிருக்கிறது. முதலாளிகள் மற்றும் மாத சம்பளக்காரர்கள் அனைவரும் இந்தமாதம் ஏதோவொரு வகையில் தப்பித்துக் கொள்ள பெரிதும் பொருளாதாரத்தில் மாட்டிக் கொண்டு முழிப்பவர்கள் தினசரி கூலிகள் தான். இந்தத் தொழிலாளிகள் சினிமாவிலும் இருக்கிறார்கள். தென்னிந்திய திரைப்பட சங்கத்தின் மொத்த 25000 உறுப்பினர்களில் 15000 க்கும் அதிகமான உறுப்பினர்கள் தினசரி கூலி தொழிலாளிகள் தான். இவர்களின் துயர் துடைக்க உதவிக்கரம் நீட்டும் படி ஏற்கனவே பெப்சி அமைப்பின் சார்பாக வேண்டுகோள் வைக்கப்பட்டது. ரஜினி, சிவக்குமார் குடும்பம், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் என சில முன்னணி நடிகர்கள் மட்டுமே சொற்பமான தொகையை நிவாரணமாக கொடுத்தனர். பிற முன்னணி நடிகர் நடிகைகள் வாயே திறக்கவில்லை. மீண்டும் பெப்சி அமைப்பு, “பிற மாநில நடிகர் நடிகைகள் அவர்களின் தொழிலாளர்களுக்காக அள்ளிக் கொடுக்கிறார்கள். நீங்கள் கிள்ளியாவது கொடுங்கள்” என்று அறிவித்தது. இந்த அறிவிப்பு சிலரை அசைத்துப் பார்த்திருக்கிறது. இதுவரை அமைதி காத்த தமிழ் சினிமாவின் முன்னணி நாயகிகளில் ஒருவரான நயன்தாரா தன் சார்பாக 20 இலட்சம் வழங்குவதாக அறிவித்துள்ளார். இவரைத் தொடந்து பிற நடிகர் நடிகைகளும் தங்களது உதவிக்கணக்கை தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.