Tamil Movie Ads News and Videos Portal

அகிலன்- விமர்சனம்

உணவு தான் கனவு என்று வாழும் நிலையில் உள்ளவர்களுக்கு எந்த வகையிலாவது உதவக்கரம் நீட்ட வேண்டும். அதற்குப் பின்னால் எவ்வளவு சதிகள், சூழ்ச்சிகள், அரசியல் இருந்தாலும் அதனை தவிடு பொடியாக்க வேண்டும் என்பதை பெரு நோக்கமாக கொண்டுள்ளான் அகிலன். பசி என்பது உலகப்பொதுவானது. அதைத் தீர்க்க நாடு கடந்து மனிதர்கள் ஒன்றிணைந்தால் உலகமே ஒரு கூட்டுக்குள் ஒன்றிணையும். அப்படி ஒன்றிணைந்தால் மக்களின் பசியை வைத்துப் பிழைப்பு நடத்தும் முதலாளிகளுக்கும் அரசியல் வாதிகள் மற்றும் அதிகாரிகளுக்கும் வருமானம், அதிகாரம் ஆகியவை தடைபடும் என்ற அரசியலையும் சமூக நோக்கோடு அணுகியிருக்கிறது படம்

ஆர்பரில் ஆல் இன் ஆளாக வலம் வருகிறார் ஜெயம்ரவி. தான் யாரிடம் வேலை செய்கிறோமோ அவரையே விஞ்சி பெரு வில்லன் கபீரிடம் இணைகிறார். பெரும் வினைகளை துணைகளாக்கி கொண்டு ஜெயம் ரவி பயணிப்பது எதற்காக? என்பதற்கு பதில் சொல்கிறது படத்தின் திரைக்கதை

கப்பல் துறைமுகத்தில் நிறைய நடிகர்கள் வலம் வந்தாலும் ஒற்றை ஆளுமையாக ஈர்க்கிறார் ஜெயம் ரவி. பொன்னியின் செல்வனுக்கும் கடலுக்கும் தொடர்பு உண்டு என்பதாலோ என்னவோ, கடல் காட்சிகளில் எல்லாம் ஜெயம் ரவியை அப்படி ரசிக்க முடிகிறது. நாயகிகள் பிரியா பவானி சங்கர், தான்யா ரவிச்சந்திரன் இருவருக்கும் சிறுவேடம் தான். சிறப்பாகச் செய்துள்ளார்கள். ஹரிஸ் பேரடி, சாய் தீனா, கபீர் கேரக்டரில் வருபவர், முரளியாக வரும் போலீஸ் கேரக்டர் என சகலரும் சளைக்காது நடிப்பில் அசத்தியுள்ளனர். இவர்களில் தனித்துத் தெரியும் கேரக்டரால் கவனிக்க வைக்கிறார் மதுசூதனராவ்.

சாம்.சி எஸ் வலிந்து திணித்துள்ள சில இன்ஸ்ட்ரூமெண்ட்களின் சவுண்ட்களை தவிர்த்து மொத்தப்படத்திற்கும் சிறப்பாகவே இசை அமைத்துள்ளார். பாடல்களுக்கு பெரிதாக வேலையில்லை என்பதால் அதைத் தனித்துச் சொல்லவேண்டியதில்லை. ஒளிப்பதிவாளர் விவேக் ஆனந்த் சந்தோசம் மிக அழகானதொரு விஷுவலைக் கொடுத்துள்ளார். ஆர்பரின் பிரம்மாண்ட காட்சிகள் எல்லாம் அவ்வளவு கலைநேர்த்தியோடு படம் பிடிக்கப்பட்டுள்ளது. மேலும் சிஜி டீம் தனது வேலைகளை நச் என செய்துள்ளது. தயாரிப்பாளர்கள் இருவரும் இப்படத்திற்கு தாரளமாக செலவு செய்துள்ளார்கள். படத்தின் பிரம்மாண்டத்தில் பட்டொளி வீசிப்பறக்கிறது புரொடக்‌ஷன் வேல்யூ

மிகத்தேவையான சமூகக்கதை. அதை இப்படியான ஒரு மினிமம் கியாரண்டி ஹீரோவை வைத்துச் சொல்வது தான் சரி என முடிவெடுத்துள்ள இயக்குநர் கல்யாண் கிருஷ்ணனின் புத்திசாலித்தனத்திற்கு பாராட்டுக்கள். தொய்வற்ற முதல்பாதியும், கனமான செய்திகள் நிறைந்த இரண்டாம் பாதியும் படத்தை தூக்கி நிறுத்தியுள்ளன. ஜெனரலாக எல்லோருக்குள்ளும் கனெக்ட் ஆகக்கூடிய கதை என்பதால் அகிலனுக்கு ஆதரவு அளிப்பது நமது கடமை
3.5/5
-மு.ஜெகன் கவிராஜ்