Tamil Movie Ads News and Videos Portal

அசோக் செல்வன் நடிக்கும் காமெடி, டிராமா படத்தில் இணைந்தார் மேகா ஆகாஷ் !

தேவதையின் சிரிப்பு, க்யூட்டான முகம், அற்புத நடிப்பு என அனைத்தும் ஒருங்கே பெற்றிருக்கும் நடிகை மேகா ஆகாஷ், சினிமாவில் அறிமுகமான குறைந்த காலத்தில், மிகப்பெரும் வரவேற்பு பெற்று, ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்படுகிறார். தமிழின் மிக முக்கிய ஆளுமைகளுடன் இணைந்து நடித்திருக்கும் மேகா ஆகாஷ் இளமை பொங்கும் திறமையுடன் தரமான படங்களை தந்து வரும் அசோக் செல்வனின் அடுத்த காமெடி, டிராமா படத்தில் நாயகியாக இணைந்து நடிக்கவிருக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை இயக்குநர் சுசீந்தரனிடம் இணை இயக்குநராக பணியாற்றிய அறிமுக இயக்குநர் ஸ்வாதினி எழுதி இயக்குகிறார். கெனன்யா ஃபிலிம்ஸ் தயாரிப்பாளர் J.செலவகுமார் இந்தப்படத்தை தயாரிக்கிறார்.

கெனன்யா ஃபிலிம்ஸ் தயாரிப்பாளர் J. செலவகுமார் இது குறித்து கூறியதாவது… மிகவும் திறமை வாய்ந்த, இளம் நடிகையான மேகா ஆகாஷ் எங்கள் படத்தில் இணைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இப்படத்தின் நாயகி கதாப்பாத்திரம் கதைப்படி, நவநாகரீக ஸ்டைல் லுக்கில் இருக்கும் அதே நேரம், குடும்பபாங்கான தோற்றமும் கொண்டிருக்க வேண்டும். இயக்குநர் ஸ்வாதினி நடிகை மேகா ஆகாஷை பரிந்துரைத்தபோது, அவர் இக்கதாப்பாத்திரத்தில் கச்சிதமாக பொருந்துவார் என அனைவக்கும் தோன்றியது. திரைக்கதையை பலமுறை படித்தவன் என்கிற முறையில் மேகா ஆகாஷ் இக்கதாப்பாத்திரதிற்கு கச்சிதமாக உயிர் தருவார் மேலும் அவர் அசோக் செல்வனுக்கு மிகச்சரியான, பொருத்தமான ஜோடியாக இப்படத்தில் மிளிர்வார் என்பதில் எனக்கு துளியளவும் ஐயமில்லை. அவருடன் இணைந்து பணியாற்றும் மிகச்சிறந்த நேரத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறோம் என்றார்.

படத்தின் தற்போதைய நிலை குறித்து கூறியபோது… அரசாங்கம் கொரோனாவுக்கு எதிரான பாதுக்காப்புடன், படப்பிடிப்பை துவங்குவதற்கான, தளர்வுகளை அறிவித்திருப்பது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்திருக்கிறது. ஒரு சினிமா தயாரிப்பாளராக, எங்களது தற்போதைய தேவையை நிறைவேற்றியதற்கு அரசாங்கத்திற்கு இந்நேரத்தில் நன்றி சொல்லி கொள்கிறேன். நாங்கள் இப்படத்தின் படப்பிடிப்பை, அரசு கூறியுள்ள அனைத்து முன்னெச்செரிக்கைகளையும் கடைப்பிடித்து, வரும் அக்டோபரில் துவங்கவுள்ளோம். அனைவரையும் கவரும் குடும்ப, காமெடி, டிராமாவான இப்படத்தின் தலைப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

நடிகை மேகா ஆகாஷ் கூறியதாவது… மிகத்தரமான, நேர்த்தியான திரைக்கதை கொண்ட படத்தில், அதிலும் பெண் கதாப்பாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொண்ட படத்தில் நடிப்பது என்பது எந்த ஒரு ஹீரோயினுக்கும் வரமே!. அவ்வளவு எளிதில் இம்மாதிரியான வாய்ப்புகள் கிடைத்திராது. இயக்குநர் ஸ்வாதினி படத்தின் திரைக்கதையை கூறியபோது கதாப்பாத்திரத்தின் ஆத்மாவுக்குள் கரைந்து போனேன். இப்படத்தில் பங்கு கொண்டது பெரும் மகிழ்ச்சி. அடுத்த மாதம் நடக்கவுள்ள படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் நாளை எண்ணி ஆவலுடன் காத்திருக்கிறேன் என்றார்.