Tamil Movie Ads News and Videos Portal

திருவாரூர் கலைஞர் கருணாநிதி வீட்டை சென்னைக்கு கொண்டு வந்த கலை இயக்குநர் G.துரைராஜ்!

தமிழ் சினிமாவில் முன்னணி கலை இயக்குனராக வலம் வரும் G துரைராஜ், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்ட பொங்கல் விழாவிற்காக, கலைஞர் கருணாநிதி அவர்களின் திருவாரூர் வீட்டை அச்சு அசலாக சென்னையில் அமைத்துள்ளார்.

சட்ட மன்ற உறுப்பினர் திரு. வேலு அவர்கள் ஏற்பாட்டில், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் பங்குகொண்ட பொங்கல் விழா குருபுரம் விளையாட்டுத் திடலில் நடைபெற்றது. இவ்விழாவிற்காக தான் கலைஞர் கருணாநிதி அவர்களின் திருவாரூர் வீட்டை சென்னையில் அமைத்துள்ளார் கலை இயக்குநர் G துரைராஜ். அச்சு அசலாக  நிஜ வீட்டை போலவே அமைந்திருக்கும் இந்த வீட்டினை,  பொதுமக்கள் ஆவலுடன் பார்வையிட்டனர். மேலும் அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களும் வீட்டினை பார்த்து வியந்து பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து கலை இயக்குநர் G துரைராஜ் கூறியதாவது…
நீண்ட காலமாக தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களில் கலை இயக்குனராக பணியாற்றி வருகிறேன், ஆனாலும் ஒரு பொது விழாவிற்கு செட் அமைப்பது இதுவே முதல் முறை. திரு.உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்று கலந்துகொள்ளும் முதல் பொங்கல் விழா, அதற்காக செட் அமைக்க சொன்னபோது, கொஞ்சம் வித்தியாசமாக ஏதாவது செய்யலாம் என்று நினைத்தேன். அப்படித்தான் கலைஞர் கருணாநிதி அவர்களின் திருவாரூர் வீடு ஐடியா வந்தது. திரு.உதயநிதி ஸ்டாலின் அவரது தாத்தாவின் இல்லத்தில் நின்று, பொதுமக்களுடன் பொங்கல் கொண்டாடினால் நன்றாக இருக்கும் என்ற எண்ணத்தில் தான் இந்த வீட்டை உருவாக்கினோம். இதற்காக திருவாரூர் சென்று மாதிரி வரை படங்களை தயார் செய்து , கலைஞர் வாழ்ந்த வீட்டை அப்படியே இங்கு உருவாக்கினோம். பொதுமக்கள் கூட்டமாக வந்து, ஆவலுடன் பார்வையிட்டது மிகுந்த மகிழ்ச்சி தந்தது. திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களும் தனியே பாராட்டியது பெரிய ஊக்கம் தந்தது என்றார்.

கொடி, வருத்தப்படாத வாலிபர் சங்கம், காக்கி சட்டை, ஐங்கரன் முதலாக பல்வேறு தமிழ் திரைப்படங்களில் பணியாற்றியவர் கலை இயக்குநர் G துரைராஜ் என்பது குறிப்பிடதக்கது.