Tamil Movie Ads News and Videos Portal

படிக்கும் வயதில் காதல் வேண்டாம் – மாணவர்களுக்கு சௌந்தரராஜா வேண்டுகோள்!

உலக இருதய தினம் மற்றும் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு திருச்சி எஸ்.ஆர்.எம் மருத்துவமனை, ஆராய்ச்சி மையம் மற்றும் எஸ்ஆர்எம் கல்வி குழுமத்தின் இதர கல்வி நிறுவனங்கள் இணைந்து மாரத்தான் போட்டியை நடத்தினார்கள். இதில் சிறப்பு விருந்தினராக நடிகரும், சமூக ஆர்வலருமான சௌந்தரராஜா கலந்துக் கொண்டு மாரத்தான் போட்டியை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

இப்போட்டியில், அனைத்து கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் சுமார் 700 பேர் கலந்துக் கொண்டனர். இதில் வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசு பொருட்களை நடிகர் சௌந்தரராஜா வழங்கினார். அதன்பின் கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்து பேசிய சௌந்தரராஜா, மறைந்த நடிகரும் சமூக ஆர்வலருமான விவேக் இறந்தாலும், அவர் இந்த மண்ணில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

அவர் நட்டு வைத்த மரக்கன்றுகள் இன்னும் இந்த மண்ணில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறது. அவரது இடத்தினை தக்க வைக்க யாராலும் முடியாது. மண்ணுக்கும் மக்களுக்கும் உபயோகமாக வாழ்வதே வாழ்க்கை. படிக்கும் காலத்தில் மாணவ, மாணவிகள் காதலிக்க வேண்டாம். அந்த வயதில் உங்கள் வாழ்க்கையினை நீங்கள் தீர்மானிக்க முடியாது. படிப்பை முடித்த பிறகு திருமணம் செய்து கொள்ளுங்கள்’ என்றார். மேலும் படித்த இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.