Tamil Movie Ads News and Videos Portal

துபாயின் தங்க விசா பெற்ற முதல் தமிழ் நடிகர்!

ஐக்கிய அரபு அமீரகத்தின் தங்க விசா பெறும் முதல் தமிழ் நடிகர் என்ற பெருமையை நடிகரும் திரைப்பட இயக்குநருமான ஆர் பார்த்திபன் பெற்றுள்ளார். சினிமா துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக இந்த கவுரவம் வழங்கப்பட்டுள்ளது.

தேசிய விருது பெற்ற திரைப்பட ஆளுமையான பார்த்திபனுக்கு துபாயின் அடையாள மற்றும் குடியுரிமைக்கான ஆணையத்தின் (ICA) அதிகாரிகள் விசாவை வழங்கினர். தனக்கு தங்க விசா வழங்கிய துபாய் அரசுக்கு பார்த்திபன் நன்றி தெரிவித்துள்ளார்.

துபாயில் இருந்து பேசிய அவர், “எனக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டதற்கு மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். துபாய் அரசாங்கத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள். இந்த சிறப்புரிமைக்கு தகுதியானவன் என்று என்னை கருதியதற்காக துபாய் அரசுக்கு அன்பும் நன்றியும்,” என்று கூறினார்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கோல்டன் விசா என்பது நீண்ட கால குடியிருப்பு விசா முறையாகும், இது ஐந்து முதல் 10 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படுகிறது, மேலும் தானாகவே புதுப்பிக்கப்படும் வசதியையும் கொண்டதாகும். பல்வேறு துறைகளைச் சேர்ந்த சாதனையாளர்கள், தொழில் வல்லுநர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் அரிய திறன்களைக் கொண்டவர்களுக்கு இது வழங்கப்படுகிறது.

சமீபத்தில் நடைபெற்ற தேசிய திரைப்பட விருதுகள் விழாவில் ஒத்த செருப்பு சைஸ் 7 படத்திற்காக ஸ்பெஷல் ஜூரி விருதை பெற்ற பார்த்திபன், தற்போது அப்படத்தின் இந்தி ரீமேக்கில் ஈடுபட்டுள்ளார். இரவின் நிழல் என்ற தமிழ் திரைப்படத்தையும் அவர் இயக்கியுள்ளார். ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்ட முதல் திரைப்படமான இரவின் நிழலுக்கு ஆஸ்கர் நாயகன் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.