Tamil Movie Ads News and Videos Portal

பெரிய நடிகர்கள் செய்யாததை வரலெட்சுமி செய்கிறார்

தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு அமலில் உள்ள போது பாதிக்கப்பட்ட பீகார், மேற்கு வங்காளம், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குக் கிளம்புவதற்கு முன்பாக நடிகை வரலட்சுமி சரத்குமார் தான் தொடங்கிய சமுக சேவை அமைப்பான சேவ் சக்தி (Save Shakti) பவுண்டேஷன் சார்பாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கே சென்று அவர்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்கி வந்தார்.

அதே போல் தற்போது மேற்கு வங்காளத்தை சேர்ந்த 2000 புலம்பெயர் தொழிலாளர்கள் இன்று சென்னையிலிருந்து அவர்களது சொந்த ஊருக்கு கிளம்பினர். அவர்களுக்குத் தேவையான உணவு, தண்ணீர், முக கவசம் மற்றும் மருத்துவ பொருட்கள் என அவர்கள் ஊர் சென்று சேரும் வரை அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருள்களை இன்று நடிகை வரலட்சுமி சரத்குமார் வழங்கினார் .

நடிகை வரலட்சுமி சரத்குமார் அவர்களின் தாய் சாயா தேவி மற்றும் சேவ் சக்தி உறுப்பினர்களுடன் துரிதமாக செயல்பட்டு இந்த பொருட்களை அனைவருக்கும் வழங்க உதவி செய்தனர். இந்த உதவிகள் நல்லபடியாக நடைபெற உதவியாக இருந்த சென்னை காவல் துறை, சென்னை மாநகராட்சி, இந்திய ரயில்வே துறை, திரு.கவுதம் சந்தர் (Sankalp Beautiful World), மற்றும் சேவ் சக்தி உறுப்பினர்களுக்கு தனது இதயம் கனிந்த நன்றியை நடிகை வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துக் கொண்டார்.

மேலும் சேவ் சக்தி (Save Shakti) பவுண்டேஷன் சார்பாக பசியால் வாடும் நாய், மாடு உள்ளிட்ட வாயில்லா ஜீவன்களுக்கும் வரலட்சுமி சரத்குமார் அவரது தாய் சாயா தேவி உணவளித்தும், மருத்துவ உதவிகளையும் செய்தும் வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.