‘வெண்ணிலா கபடிக் குழு’, ‘முண்டாசுப்பட்டி’, ‘இன்று நேற்று நாளை’ ‘இராட்சசன்’ போன்ற வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்ததன் மூலமாக தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டவர் நடிகர் விஷ்ணுவிஷால். இவரின் சினிமா வாழ்க்கை சிறப்பாக சென்றாலும், தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையில் எதிர்பாராத புயல் வீசியது. இது குறித்து தன் எண்ணங்களை மிக வெளிப்படையாக ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார் விஷ்ணுவிஷால். ரசிகனுக்கு ஒரு கடிதம் எனத் தொடங்கும் அந்தப் பதிவில், “நான் 2017ம் ஆண்டு என் மனைவியையும் 6 மாத காலக் குழந்தையையும் பிரிந்தது என் வாழ்வில் மிகப்பெரிய அடி. மேலும் என் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரித்த படங்களை தவறான நேரங்களில் வெளியிட நிர்பந்திக்கப்பட்டேன்; பிரபுசாலமன் இயக்கத்தில் காடன் படப்பிடிப்பில் கலந்து கொண்ட போது, விபத்தில் சிக்கி இரண்டரை மாதங்களை படுக்கையில் கழித்தேன்.
இதனால் என் உடல் எடை கூடியது; மனச்சோர்வினாலும் அழுத்தத்தாலும் குடிகாரனாக மாறினேன். இதனால் ராட்சசன் போன்ற பல நல்ல கதைகள் என் கையை விட்டுப் போனது; என் தந்தையும் என்னால் பாதிக்கப்படுவதைக் கண்டு என் செயல்பாடுகளை மாற்ற முடிவு செய்தேன். விபத்திற்குப் பின்னர் உடற்பயிற்சி செய்யக்கூடாது என்று கூறினார்கள்; நான் என் கவனத்தை திசை திருப்ப உடற்பயிற்சி செய்யத் துவங்கினேன். முதல் நாள் ஒரு புஸ்-அப் கூட எடுக்க முடியவில்லை. இன்று 16 கிலோ உடல் எடையை குறைத்திருக்கிறேன். யோகா செய்தேன். குடியை நிறுத்தினேன். எதிர்மறை சிந்தனையுடன் பேசுபவர்களை தவிர்த்தேன். அது போன்ற நண்பர்களுடனான உறவைத் துண்டித்தேன். இன்று முற்றிலும் வேறொரு மனிதனாக மாறியிருக்கிறேன். நான் உங்களுக்குச் சொல்ல விரும்புவது ஒன்று தான். நாம் எப்பொழுது வேண்டுமானாலும் வாழ்க்கையில் கீழே விழலாம். ஆனால் நேர்மறையான சிந்தனைகளை வளர்த்துக் கொண்டு நாம் மனவலிமையைக் கூட்டினால் நிச்சயமாக மீண்டும் எழலாம். என்பது தான்” என்று அந்தப் பதிவில் கூறி இருக்கிறார்.