KJR Studios வழங்கும் Koustubh Entertaiment தயாரிப்பில் இயக்குநர் பாரி K விஜய் இயக்கத்தில், வைபவ், பார்வதி நடிப்பில், கலக்கலான ஃபேண்டஸி காமெடியாக உருவாகியுள்ள திரைப்படம் ஆலம்பனா. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிப் பார்க்கும் வகையில் ஒரு ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகியுள்ள இப்படம் வரும் டிசம்பர் 15 ஆம் தேதி திரைக்குவரவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையார் சந்திப்பு படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை, ஊடக, பண்பலை நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இவ்விழாவினில் நடிகர் வைபவ் பேசியதாவது…
இப்படத்தின் கதையை KJR லிருந்து சொன்ன போதே, சூப்பராக இருந்தது. யார் ஹீரோ என்றேன் நீ தான் என்றார் தயாரிப்பாளர். சந்தோஷமாக இருந்தது. எப்போதும் ஜெய், ப்ரேம்ஜி மாதிரி ஆட்களுடனேயே நடித்துவிட்டேன். இப்படத்தில் முனீஷ்காந்த், காளிவெங்கட் போன்ற சீனியர்களுடன் நடித்தது மிக மகிழ்ச்சியாக இருந்தது. இப்படத்தில் இசைக்காக ஹிப்ஹாப் ஆதியை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றபோது நான் பேசினேன். பூதம் கதை என்றவுடன் உங்களுக்கு பூதம் கேரக்டர் சூப்பராக இருக்கும் என அவரும் என்னைக் கலாய்த்து விட்டார். இந்தப்படத்திற்கு சிறப்பான இசையைத் தந்துள்ளார். படத்தில் உண்மையிலேயே சிரித்து மகிழும் அளவு காமெடி இருக்கும். இந்தப்படம் எனக்குப் புதுவிதமான ஃபேமிலி எண்டர்டெயினராக இருக்கும். உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும் நன்றி.