Tamil Movie Ads News and Videos Portal

ஆகோள்-ஒரு புத்தகம்/ ஒரு பார்வை

நவீனதொழில் நுட்பத்தை முதன்மையாக கொண்ட கதையில் இருந்து 1920-ஆம் ஆண்டு கை ரேகை சட்டத்திற்கு எதிராக பெருங்காமநல்லூரில் நடந்த போராட்ட காலத்திற்கு பயணிக்கிறது இந்த நாவல்..

மனிதர்களை வெறும் எண்களாக மாற்றிவிட்ட அரசாங்கத்தின் பிடியில் உள்ள தனிமனித டேட்டாக்களைப் பாதுகாக்கும் ஒரு நிறுவனத்தில் பணியாற்றுபவன் நித்திலன். அடையாள் என்ற ஒரு அடையாளத்திற்குள் தனி மனிதனின் எல்லாமும் அடக்கப்படுகிறது. அந்த டேட்டாக்களைப் பாதுகாப்பதில் பிரச்சனை. ஒரு மனிதனின் டேட்டாவை ₹500 ரூபாய்க்கு வாட்ஸப்பில் விற்றுவிடும் அவலம் நடக்க..அங்கிருந்து விரிகிறது கதை.

இந்த டேட்டாக்களை நாம் பத்திரப்படுத்த வேண்டும் என்றால் கால இயந்திர ரெயில் மூலம் 1935-க்கு பயணித்து டெல்லியில் வைத்து விடுவோம். பின் அரசாங்கத்திற்கு தேவைப்படும் போது எடுத்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்கிறது நித்திலனின் நிறுவனமும் அரசும்.

அறிவியலின் துணையோடும் யோகிகள் செய்யும் யாகங்களின் துணையோடும் கால இயந்திர ரயில் புறப்படுகிறது. ஆனால் கால இயந்திர ரெயில் கோளாறு காரணமாக 1935-ம் ஆண்டுக்குச் செல்வதற்குப் பதில் 1920-க்கு சென்று விடுகிறது. சென்று சேர்ந்த இடம் உசிலம்பட்டி அருகே. வீர் ஜடாயு என்ற டைம்மிஷன் ரெயிலில் வந்த நித்திலன், நிஷா பைலட், கோவர்த்தனன், பிரமிள் ஆகியோர் திகைத்துப் போகிறார்கள். பின் தெளிந்து அந்தக் கிராமத்தின் சத்திரத்தில் தங்குகிறார்கள். இவர்களின் தொழில்நுட்ப அறிவும் மொழியும் அறியாத மக்களோடு இவர்கள் பயணிக்கும் அத்தியாயங்கள் வாசிப்பை ரசிக்க வைக்கிறது. மேலும் இவர்களுக்கு என்று ஒவ்வொரு தனிக்கதையும் இருக்கிறது. அந்தக் கிராமத்திற்கும் ஒரு தனிக்கதை இருக்கிறது. மக்களின் விரல் மற்றும் கருவிழி அடையாளங்களை, இன்று ஈசியாக எடுக்கிறது அரசு. அன்று கைரேகைச் சட்டத்திற்கு எதிராக அந்தக் கிராமமே மிகத்தீவிரமாக போராடுகிறது. இப்படி இரண்டு விசயங்களையும் அழகாக லிங் பண்ணி கபிலன் வைரமுத்து பேசியிருக்கும் அரசியல் அற்புதம்

அறிவியல் துணையின்றி புறவுலகும் ஆன்மிகம் துணையின்றி அகவுலகம் இயங்குவதில்லை என்ற புரிதலை கொண்டுள்ளார் நூல் ஆசிரியர்.

நாவலில் ஒரு வசனம் வருகிறது, “பகுத்தறிவையும் ஆன்மிகத்தையும் எதிரெதிர் திசையில் வைக்கிறதே தப்பு. வெளிய இருக்குற உலகத்தைப் புரிஞ்சிக்க பகுத்தறிவு. உள்ள இருக்குற உலகத்தைப் புரிஞ்சிக்க ஆன்மிகம். இரண்டும் வேறவேற. ஆனா இரண்டுமே தேவை” என்கிறார் ரைட்டர்

கால இயந்திர ரெயில், 1920-ல் இருந்து கொண்டு 2032-ல் பிரமதரிடம் பேசும் விசயங்கள், 1920-ல் ஒருவரைக் கொன்றால் 2032-ல் 50 பேர் இறந்து விடுவார்கள் போன்ற லாஜிக், உலக மனிதர்களின் அடையாளங்களை வைத்தே இன்னொரு உலகத்தைப் படைக்க முடியும் என்ற புனைவு நிறைந்த அதிர்ச்சி என நூலில் வியக்க வைக்கும் சங்கதிகள் நிறையவுள்ளது. வாசிப்பில் அதீத கவனத்தைக் கோரும் நூல். சில பாராக்களை இருமுறைக்கு மேல் வாசித்தால் தான் புரியும்.

அரசாங்கம்(அதிகாரம்) தான் நினைத்ததைச் செய்ய மனிதர்களை எந்த இக்கட்டுக்குள்ளும் கொண்டு செல்லும் என்பதை நறுக் எனச் சொல்லியிருக்கிறது நாவல். இந்த நூலில் நித்தலனின் காதலியாக வரும் செங்காந்தள் கேரக்டரை மிகவும் ரசித்தேன். அரசியல் முதிர்ச்சியுள்ளவர்கள் அரசை கேட்க நினைக்கும் கேள்விகளை எல்லாம் அந்தக் கேரக்டர் மூலமாக கேட்க வைத்து அசத்தியிருக்கிறார் கபிலன்

ஒரு நல்ல விறுவிறு திரைக்கதைப் படித்த Feel கிடைத்த வகையில் சுஜாதா ஸ்டைல் நாவல் இது எனலாம். வெறும் மூளை உதிர்த்த எழுத்துக்களாக இல்லாமல், இதயம் பேசிய எழுத்துக்களும் இருப்பதால் ஆகோள் நிறைவைத் தந்தது.

#Aagol #ஆகோள் #KabilanVairamuthu #கபிலன் வைரமுத்து