கட்டுனா ரவுடி அய்யரைத் தான் கட்டுவேன்னு ஒத்தக்கால்ல நிக்கிற தாரா சந்தானத்தை அய்யர்னு நினைச்சு உருகி மறுகி காதலிக்கிறார் கிஸ் அடிக்கிறார். பின் அவர் அய்யர் இல்ல லோக்கல் பார்ட்டினு (உண்மையிலே லோக்கல் பார்ட்டின்னு ஒண்ணு இருக்கா?) தெரிஞ்சதும் அவரோடு கா விடுகிறார். சந்தானம் காண்டாகிறார். பின் சமாதானப்படலம் மறுபடியும் பிரிவு. இப்போது சந்தானத்திற்கு ஒரு டாஸ்க் வைக்கிறார் தாரா. அந்த டாஸ்க் என்ன? அவர் அதை எப்படி வென்று மாமியை கரெக்ட் செய்தார்? என்பது தான் A1.
சும்மா சொல்லக்கூடாது. பழைய சந்தானம் ரிட்டர்ன். அவர் அடிக்கும் ஒவ்வொரு கவுண்டருக்கும் ஆடியன்ஸ் சிரிக்கிற சத்தம் டிக்கட் கவுண்டர் வரையிலும் கேட்குது. எம்.எஸ் பாஸ்கர் வாயைத் திறந்தாலே வடசென்னை பீறிக்கொண்டு வெளியே வருகிறது. மாறன், தங்கதுரை, என சுத்தி இருக்கிற எல்லாக் கேரக்டர்களும் படத்தின் டைரக்டர் ஜான்சனை தங்கள் நடிப்பால் காப்பாற்றி இருக்கிறார்கள். நாயகி தாராவும் ஜோராக தன் வேலையைச் செய்துள்ளார்.
சந்தானம் இருக்கார் கதை முக்கியமல்ல..காமெடி தான் முக்கியம் என சரியான முடிவை எடுத்ததில் இருக்கிறது இயக்குநரின் கெட்டிக்காரத் தனம். ஒவ்வொரு காட்சிக்கும் சரியான பினிஷிங் பக்காவான ஓப்பனிங் என படத்தின் ஓப்பனிங்கில் இருந்தே திரைக்கதை பிசிரடிக்காமல் அசரடிக்கிறது. லாஜிக்லாம் பார்க்கக் கூடாது என்பது பின் அறிவிப்பு மக்கா.
சந்தோஷ் நாராயணன் கன கச்சிதம். குறிப்பாக மாலை நேர மல்லிப்பூ பாடல் குறும்பு அய்யா. எடிட்டர், ஸ்டண்டர், ஒளிப்பதிவாளர் போன்ற டெக்னிஷியன்ஸ் டீம் எல்லாமே பக்கா.
ஆம்பளை எத்தனை பொண்ணனாலும் வச்சிக்கலாம் என்ற கருத்து க்ளைமாக்ஸ்ல லைட்டா வலியுறுத்தப்படுதோன்னு சின்னதா ஒரு டவுட்டு வருது. ஏன்னா மூன்று பெண்கள் ஒரு கணவருக்காக உருகுவது எல்லாம் கேலிச் சித்திரம். இவையெல்லாம் நம் மண்டையில் தியேட்டருக்குள் இருக்கும் போது உரைக்காது என்பது தான் படத்தின் வெற்றி. நல்லாருங்க சந்தானம்!