மாங்காடு அம்மன் மூவிஸ் தயாரிப்பில் ராஜகணபதி தயாரித்து, கதையின் நாயகனாக நடித்துள்ள படம் ‘A படம்’. அண்ணல் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை தழுவி இன்றைய சமூக நிகழ்வுகளை சொல்லும் படமாக உருவாகியுள்ள இந்த படத்தை இயக்குனர் கேஸ்லெஸ் சிவா.கோ என்பவர் இயக்கியுள்ளார். மேகா, சுஷ்மிதா கதாநாயகிகளாக நடிக்க, போஸ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று காலை சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு, நடிகையும் இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன், இயக்குனர் தர்மசீலன் செந்தூரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நடிகையும் இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் பேசும்போது,
“இந்த படத்தின் தயாரிப்பாளர் ராஜகணபதியின் சிரிப்பே தனித்துவமாக இருக்கிறது. வெகுளித்தனமான, மனதில் இருப்பதை அப்படியே பிரதிபலிக்கும் சிரிப்பு அது. இதில் அம்பேத்காராக நடித்துள்ள ராஜகணபதியின் நடிப்பு வசனம் ஆகியவற்றை பார்த்து திகைத்துப்போய் விட்டேன். அர்ப்பணிப்போடு எந்த முயற்சி செய்தாலும் அது ஜெயிக்கும். அப்படி ஒரு வெற்றி இந்த படத்தின் இயக்குனர் கேஸ்லெஸ் சிவாவுக்கும் கிடைக்கும். மக்களோட மைண்ட் தற்போது பரபரப்பான விஷயங்களில் தான் இருக்கிறது.
இந்த படத்தின் டிரைலரை பார்த்து வியந்தேன். இந்த படத்தின் எடிட்டர் எல்.வி.கே தாஸ் அவர்களுக்கு தனியாக மிகப்பெரிய பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு படத்தில் ஒரு விஷயத்தைப் பற்றி டீடைலாக சொல்வதே பெரிது. ஆனால் இதில் பல விஷயங்களை சொல்லி இருக்கிறார்கள். இன்றைய தலைமுறையினர் பலர் காந்தி, அம்பேத்கர் பற்றி தவறாக பேசுகிறார்கள்.
ஆன்டி இண்டியன் படம் போல தான் இந்த படமும் ஒரு புதிய கோணத்தில் உருவாகியுள்ளது. ஆன்டி இண்டியன் படம் எனக்கு ரொம்பவே பிடித்துப்போய் புளூ சட்டை மாறனை அப்போதே அழைத்து பாராட்டினேன். அப்போது சென்சார் சான்றிதழ் வாங்குவதில் புளூ சட்டை மாறன் ஒரு புதிய பாதை போட்டார். அந்த பாதையில் இந்த படத்திற்கும் சென்சார் தீர்வு கிடைக்கும்” என்று பேசினார்.