இலங்கை அணியின் பிரபல கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனின் விளையாட்டுச் சம்பந்தப்பட்ட பயோகிராபி தான் இந்தப்படம். பவுலர்களில் 800 விக்கெட் எடுத்து உலக சாதனைப் படைத்த வீரர் அவர். அவரின் சாதனையைப் பெருமைப்படுத்தும் விதமாக படத்திற்கு டைட்டிலே 800 என்று வைத்திருக்கிறார்கள்
இலங்கையில் 1945-ல் இனக் கலவரம் நடக்கும் போது முரளிதரனின் அப்பா முத்தையா சிறுவன். 1977-ல் மீண்டும் கலவரம் நடக்கும் போது முரளிதரன் சிறுவன். இந்தப் போராட்டங்களின் வழியாகவே படம் துவங்குகிறது. முரளிதரன் சிறு வயது முதலே போர் என்றால் பயமும் வெறுப்பும் கொண்டவராக வளர்கிறார். அவருக்கு கிரிக்கெட் ஆர்வம் தொற்றும் காட்சிகளை இயக்குநர் கவித்துவமாக படம் பிடித்துள்ளார். அப்படியான காட்சிகளின் வழியே முரளிதரனின் கிரிக்கெட் வாழ்க்கை பயணிக்கிறது
முரளிதரனாக நடித்துள்ள மதுர் மிட்டால் மிகச்சிறந்த தேர்வு. கை வளைவு முதற்கொண்டு கண்களை உருட்டி திரட்டும் வரையில் கச்சிதமாக முரளிதரனாக மாறியுள்ளார். 6 வயது முரளிதரனாக வரும் ரித்விக், 12 வயது முரளிதரனாக வரும் ப்ரித்வி இருவரும் கூட நல்ல தேர்வு. மகிமா நம்பியார் கிட்டத்தட்ட படம் முடியும் தருவாயில் தான் வருகிறார். ஆனாலும் தனது முத்திரையை திறம்பட பதிக்கிறார். மிகவும் ஆடியன்ஸை ஈர்க்கும் கேரக்டரில் வருகிறார் கிங் ரத்னம். இலங்கை அணியின் கேப்டனாக இருந்த அர்ஜுன் ரணதுங்கே கேரக்டரை மிக அழகாக பிரதிபலித்துள்ளார் அவர். முரளிதரன் அப்பாவாக வேல.ராமமூர்த்தி, அம்மாவாக ஜானகி சுரேஷ் இருவரும் அச்சு அசலான தமிழ்குடிகள். முரளிதரன் இலங்கைக்காக விளையாடினாலும் அவர்களின் பெற்றோர் தமிழ்முகம் கொண்டே இலங்கையை காண்கிறார்கள். இந்த கேரக்டர் வார்ப்பு சிறப்பு. ஈழத்தலைவர் பிரபாகரன் வேடத்தில் வரும் நரேன் ஒரு காட்சி என்றாலும் பின்னியுள்ளார். முரளிதரனும் அவரும் சந்திக்கும் காட்சி ஒரு பொலிட்டிகல் மெட்டிரியல். அந்தக் காட்சியை மிக நுட்பமாக கையாண்டுள்ளார் இயக்குநர். முரளிதரன், “வன்முறை வேண்டாமே” என்று பிரபாகரனிடம் சொல்லும் போது, “அதை முதலில் அடிப்பவனிடம் சொல்லு தம்பி. திருப்பி அடிப்பவனிடம் சொல்லாதே” என்று பிரபாகரன் சொல்லும் போது தியேட்டர் அதிர்கிறது. மேலும் அந்தக் காட்சியின் மூலம் முரளிதரனின் அரசியல் நிலைப்பாடு பக்காவாக சொல்லப்பட்டிருக்கிறது
ஒரு வாழ்க்கை வரலாற்றுப்படத்தை இப்படியான எமோஷ்னல் மற்றும் எங்கேஜிங் கலந்து கொண்டு போக முடியுமா?என ஆச்சர்யப்பட வைத்துவிட்டார் இயக்குநர் MS.ஸ்ரீபதி. ஸ்கிரீன் ரைட்டிங்கில் அவ்வளவு நேர்த்தி. மேக்கிங்கும் பிரமாதம்
ப்ரவீன் கே.எல் எடிட்டிங்கில் நல்ல உழைப்பைப் போட்டுள்ளார். ஆர் டி ராஜசேகரின் கேமரா பழைய இலங்கையை கச்சிதமாக நமக்கு காட்டியுள்ளது. மேட்ச் காட்சிகளையும் துருத்தாமல் மேட்ச் செய்துள்ளார் ஆர்.டி. ஜிப்ரானின் அட்டகாசமான இசை படத்தை சிறப்பான இடத்திற்கு எடுத்துச் செல்கிறது
தமிழீழம் பற்றிய முரளிதரனின் பார்வை சற்று நெருடலாக தெரிந்தாலும் முரளிதரனின் நிலைப்பாடு& புரிதல் அது என தெளிவாகச் சொல்லியுள்ளார் இயக்குநர். மேலும் ஒரு சாதாரண மலையகத் தமிழன் சறுக்கல்களையும் அவமதிப்புகளையும் கடந்து சாதித்து எழுவதை மிக நுட்பமாக பதிவு செய்திருப்பதில் இப்படம் நாட் அவுட் கேட்டகிரிக்கு வந்திருக்கிறது. குறிப்பாக இலங்கை டீமிற்குள் இருந்த வேற்றுமை, முரளிதரன் பந்தை எறிகிறார் என்ற குற்றச்சாட்டில் உள்ள வன்மம் எல்லாவற்றையும் நேர்மையாக படம் பதிவு செய்துள்ளது. நல்ல மோட்டிவேஷன் கொடுப்பதோடு சில எஜுகேஷனையும் கொடுக்கிறது இந்த 800
3.5/5
-மு.ஜெகன் கவிராஜ்