வித்தியாசமான தலைப்புகளும் வித்தியாசமான கதைகளும் தமிழ்சினிமாவில் தலையெடுத்து வருவது பாராட்டுதலுக்குரியது. அதேநேரம் அந்த வித்தியாச முயற்சிகளில் ஆர்வம் மட்டுமே இருந்தால் போதாது ஆற்றலும் இருக்க வேண்டும். 3.33 என்ற டைட்டிலில் இருக்கும் தனித்துவம் படத்திலும் இருக்கிறதா?
படத்தின் நாயகன் 3.33 இந்த நேரத்தில் பிறந்தவர் என்பதால் அந்தநேரம் வரும்போதெல்லாம் அவருக்கு எதோவொரு அசம்பாவிதம் நடக்கிறது. கனவு மூலமாக கற்பனை மூலமாக என நிறைய உளவியல் பிரச்சனைகள் அவருக்கு வருகின்றன. 3 என்பது இறைகளின் சக்தி. 33 என்பது இறை சக்திகளுக்கு எதிரான துஷ்ட சக்திகளின் நம்பர்ஸ். இறை நம்பரான மூன்றோடு நெகட்டிவ் நம்பரான இரு மூன்று இணைந்துவிட்டதால் தான் இந்த நேரத்தில் பிறந்தவர்களுக்கு நிறைய சிரமங்கள் வருகின்றன. இதை கெளதம் மேனன் மூலம் படத்தில் விளக்கமாக சொல்கிறார்கள். ஐடியாவாக இது நல்ல மேட்டர்! ஆனால் அதை சரியாக எக்ஸிகியூட்டிவ் செய்யத்தவறியதால் படத்திற்கு நேரம் சரியில்லை என எண்ணத் தோன்றுகிறது
எதார்த்த நடிப்பில் சாண்டி ஈர்க்கிறார். நாயகி ஸ்ருதிசெல்வம் சாண்டியை காதலிக்கிறார் பின் பயமுறுத்துகிறார். சாண்டியின் அம்மா கேரக்டர் அக்கா கேரக்டர் இரண்டுமே கதைக்கு வலு சேர்த்துள்ளது
ஒளிப்பதிவாளர் சதீஷ் மனோகரன் தான் இப்படத்தின் ரியல் ஹீரோ. ஒரே வீட்டிற்குள் நடக்கும் கதையை தனது விதவிதமான கேமரா கோணங்களால் கரை சேர்க்கிறார். இசை அமைப்பாளர் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் பின்னணி இசையில் அசத்தியிருக்கிறார்.
மிக வலுவான கற்பனையை கையிலெடுத்த இயக்குநர் நம்பிக்கை சந்துரு திரைக்கதையில் இன்னும் தெளிவாக சில விசயங்களைச் சேர்த்திருந்தால் படம் பெரிதாகப் பேசப்பட்டிருக்கும்
-மு.ஜெகன் கவிராஜ்