Tamil Movie Ads News and Videos Portal

‘ஆகஸ்ட் 16,1947 படவிழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் பேச்சு!

ஏ.ஆர்.முருகதாஸ் புரொடக்‌ஷன் சார்பில் ஏ.ஆர்.முருகதாஸ், ஓம் பிரகாஷ் பட் மற்றும் நர்சிராம் செளத்ரி தயாரித்திருக்கும் ‘ஆகஸ்ட் 16,1947’ திரைப்படத்தை பொன்குமார் இயக்கி இருக்கிறார். கெளதம் கார்த்தி, ரேவதி, புகழ் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா  (27.03.2023) அன்று நடைபெற்றது. 

இவ்விழாவினில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசியதாவது, “முதலில் நான் படம் பற்றி சொல்லி விடுகிறேன். இந்திய விடுதலை எனும்போது தனி மனிதர் ஒவ்வொருவருக்குமே சொல்ல முடியாத வலி இருக்கும். அப்படி இருக்கும்போது அடிமைப் பட்டு கிடந்த ஒரு நாடு எனும்போது அந்த வலியை வார்த்தைகளால் சொல்ல முடியாது. அதை பொன்குமார் கடின உழைப்பைக் கொடுத்து படமாக்கி இருக்கிறார். முதல் படமே பீரியட் படம் எனும்போது அதில் உங்கள் நம்பிக்கையும் தெரிகிறது. சவாலை சந்திக்கத் தயாரானவன் தான் சாதனையும் செய்வான் என்று சொல்வார்கள். பொன்குமார் அதற்கு தகுதியானவர். படத்தை பார்க்க வேண்டும் கதையை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் இருக்கிறது. அனைவருக்கும் வாழ்த்துகள். ஷான் ரோல்டன் இசை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. ரேவதிக்கும் வாழ்த்துகள். புகழ் நல்ல கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பது ட்ரைய்லரில் தெரிந்தது. கெளதம் கார்த்திக்கை முதலில் லண்டனில்தான் சந்தித்தேன். எனக்கும் கார்த்திக் சாரை பிடிக்கும். யாருடைய சாயலும் இல்லாமல் அவரது நடிப்பு தனித்துவமாக இருக்கும். திருமணத்திற்கு கெளதம் என்னை கூப்பிட்டு இருந்தார். அவருடைய திருமணத்தில் அனைத்து வேலைகளையும் அவரே எடுத்து செய்திருந்தது சிறப்பான விஷயம். நல்ல குணம் என்பதுதான் நம் வாழ்க்கையை தீர்மானிக்கும். அப்படியான ஒருவர்தான் கெளதம். அடுத்தடுத்தப் படங்கள் வர இருக்கிறது. வாழ்த்துகள். திருமணத்திற்கு பிறகு பலரின் வாழ்க்கையும் நல்ல விதமாக மாறும். எனக்கும் அப்படி நல்ல விஷயங்கள் நடந்தது. என்னைப் போலவே உங்களுக்கும் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. இன்று இங்கு நான் வர முக்கிய காரணம் முருகதாஸ் சார்தான். அவருடைய படங்களுக்கு பெரிய ரசிகன் நான். அவர் தயாரிப்பில் ‘மான் கராத்தே’ படத்தில் நடித்திருக்கிறேன். இதற்கு முன்பு அவர் படங்களை தொகுத்து வழங்குவது, நிகழ்ச்சிக்கு ஸ்கிரிப்ட் எழுதித் தருவது போன்ற விஷயங்களை செய்திருக்கிறேன். அடுத்து முக்கியமான ஒரு கட்டம் இருக்கிறது. அது சீக்கிரம் நடக்கும். உதவி இயக்குநர்களுக்கு முருகதாஸ் சார் சிறப்பான ஆதரவு கொடுப்பார். கூட இருப்பவர்களை நாம் பார்த்துக் கொண்டால், நம்மை மேலே இருப்பவன் பார்த்துக் கொள்வான் என ‘வீரம்’ படத்தில் அஜித் சார் சொல்வதுபோல தான் முருகதாஸ் சாரும். உங்கள் தயாரிப்பில் நிறைய நல்ல கதைகள் பார்க்க இருக்கிறோம் என்பது மகிழ்ச்சி. படத்திற்கு வாழ்த்துகள்”.