Tamil Movie Ads News and Videos Portal

1729- ஒரு புத்தகம்/ ஒரு பார்வை

ஒருத்தங்களோட வார்த்தை மட்டுமல்ல அவங்க வாழ்க்கையும் ஒரு நம்பிக்கையைத் தந்துட்டு போணும். இந்த புக்ல மரணம் கூட நம்பிக்கையைத் தந்துட்டு போகுது. அழ.வள்ளியப்பாவைத் தாண்டி குழந்தைகங்க இலக்கியம் படிச்சதே இல்லை. தோழன் தினேஷ் ராம் வம்படியா இதைப்படிச்சே ஆகணும்னு தந்தாப்ல. எனக்குப் பையன் பிறந்தன்னைக்கு என்னை வழியனுப்ப வீட்டுக்கு வந்தவரு, பேக்ல நான் இந்தப்புக்கை எடுத்து வைக்கும் போது, “வேண்டாம் இப்ப இதைப்படிக்காதீங்க. ஒரு மாசம் போகட்டும்னு சொன்னாப்ல”

அதுக்கான காரணம் புத்தகத்துல வர்ற குழந்தைகளோட வலில தெரிஞ்சது. வலிகளை வலிஞ்சி திணிக்காம கதையோட இயல்பிலே அந்த வலி நம்மை வலிக்கச் செய்யுது. சாவை எதிர்நோக்குற கேன்சர் வந்த குழந்தைங்க 1729.காம்னு கணக்கு சம்பந்தப்பட்ட ஒரு இணையதளம் துவங்கி அதை உலகப்பேமஸ் ஆக்குவாங்க.
சாவு எப்படி வரும் எப்போது வரும்னு தெரியாம வாழ்ற வாழ்க்கையை வேதனை இல்லாம வாழ்ந்துறலாம். ஆனால் சாவு இப்போ வரும் இப்படி தான் வரும்னு தெரிஞ்ச பிறகு வர்ற வாழ்க்கை இருக்கே அதுதான் கடுந்துயரம். ஆனால் அந்தக்குழந்தைங்க அதை துயரமா நினைக்காமல் கணக்குகளை உருவாக்குறதுல தங்களோட நாட்களை கணக்குலே எடுக்காம வாழ்வாங்க.

அவங்களுக்கு கிடைக்குற பணத்தை இறுதியா ஒரு அரசுப்பள்ளிக்கூடத்தை தத்தெடுக்க கொடுக்கும் போது அவங்களுக்குள்ள மரணத்தை ஜெயிச்ச ஒரு சந்தோஷம் வரும்.. அந்தச் சந்தோஷம் தான் நாம வாழ்ற வாழ்க்கை மீது ஒரு நம்பிக்கையைத் தந்துட்டுப் போகுது ❤️