உலகெங்கும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை தோற்கடிக்க தன்னலம் பாராமல் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் உழைத்து வருகிறார்கள். இவர்களுக்கு உதவும் வகையில் உலகளவில் பல நடிகர் நடிகைகள், தொழிலதிபர்கள், பிரபலங்கள் என பலரும் தங்களால் இயைந்த உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வரிசையில் முன்னாள் கலிபோர்னியா மாகாணத்தின் கவர்னரும் ஹாலிவுட் நடிகருமான அர்னால்ட் வால்ஸ்நேக்கர் 1.43 மில்லியன் டாலர் மதிப்பு கொண்ட முகக்கவசங்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை கொரோனா அச்சுறுத்தலுக்கு எதிராக போராடி வரும் டாக்டர்கள், நர்ஸுகள் பணியாற்றக் கூடிய மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்துள்ளார். இந்த வீடியோ பதிவை தனது சமூக வலைதளத்திலும் பதிவிட்டுள்ளார். மேலும் கொரோனா குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தொடர்ச்சியாக சமூக விலகலை கடைபிடிக்கும்படி மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தும் வருகிறார். அவரின் செயலை பலரும் பாராட்டி வருகிறார்கள்.