வேர்ல்ட் சினிமா போஸ்ட் மார்ட்டம் பண்ணிய கதையை பேஸ்மட்டத்தில் இருந்து எடுத்து வந்திருக்கிறார் இயக்குநர் ஏ.எல்.விஜய்.
ஜிவிக்கு வீட்டில் இருக்கவிடாத அளவுக்கு வட்டிக்காரனின் டார்ச்சர். ஒருநாளைக்குள் பணத்தைத் தராவிட்டால் மறுநாள் நடைபெற இருக்கும் நிச்சயதார்த்தம் தடை படும் என்ற எச்சரிக்கையையும் ஜிவிக்கு தருகிறார் வட்டிக்கார வில்லன். பணம் பொரட்ட (சுருட்ட) ஒரு வீட்டுக்குள் செல்லும் ஜிவி அங்கு வேறோர் சங்கடத்தில் மாட்ட…அடுத்தடுத்து என்ன என்பது தான் செளக்கிதார். (அதாங்க வாட்ச்மேன்)
கழகங்களின் தேர்தல் அறிக்கை போலவே திரைக்கதையில் நிறைய காபிபேஸ்ட். அதனாலே புதிய டேஸ்ட் நகி. பேண்டஸி பார்மட்டில் படத்தைக் கொண்டு போயிருந்தால் கூட நாய் பண்ணும் சாகசங்களை கண்டு களிக்கலாம். இல்லை பக்கா லாஜிக்கோடு நேர்த்தியாக படத்தைக் கொண்டு போயிருக்கலாம். அங்கிட்டும் இல்லாமல் இங்கிட்டும் இல்லாமல் படம் போவதால் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரின் ட்வீட் போல ஏகப்பட்ட குழப்பம்.
ஜிவியின் நடிப்பும் உடல்மொழியும் அவர் கேரக்டருக்கு வலு சேர்க்குது. மற்றபடி கதையில் அவர் கேரக்டருக்கு துளியும் வலுவில்லை. சுமன் கேரக்டரின் அளவுக்கு கூட ஜிவி கேரக்டர் எழுதப்படவில்லை என்பதே நிஜம். யோகிபாபு பேசாமல் நடந்து வரும் போதுகூட பின்னணியில் அவர் பேசும் டயலாக் வருகிறது. டப்பிங் சிங் அவ்ளோ பக்காவா இருக்கு!!
நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு மட்டுமே படத்தின் கன்டென்டை காப்பாற்றுகிறது. லைட்டிங் & கேமரா கோணங்கள் கடத்தும் உணர்வை கூட திரைக்கதையும் இயக்கமும் கடத்தவில்லை. ஜிவியின் பின்னணி இசை படத்தை முன்னணிக்கு கொண்டு வந்தாலும் காட்சிக்கு வலு இசையில் மட்டுமா இருக்கு?
தீவிரவாதிகள் வீட்டுக்குள் ஊடுருவும் காட்சிகளில் பயம் நம்மை அப்பிக்கொள்ள வேண்டும் தானே? ஜிவி கன் ஷாட்டில் தப்பிக்கும் போது நமக்கு ஜிவ் வரவேண்டும் தானே? இப்படி சிலிர்ப்பு வரவேண்டிய இடங்களில் எல்லாம் சிரிப்பு வந்து தொலைத்து விடுகிறது.
படம் ஒன்றரை மணி நேரம் என்பதும், லாஜிக் இல்லாவிட்டாலும் திரில்லர் ஜானர் படம் பார்க்கும் உணர்வு வராவிட்டாலும் படம் வேகமாக போகிறது என்பதுமே ஆறுதல்.
வாட்ச்மேனை மஸ்ட் வாட்ச்-னு சொல்லமுடியாது. ஜஸ்ட் வாட்ச்-னு வேணா சொல்லலாம்.
மீண்டும் ஒருமுறை பழைய ஏ.எல் விஜயை தரவேண்டி மதராசப்பட்டணத்தில் சென்று தெய்வத்திருமகளிடம் வேண்டுவோமாக!