Tamil Movie Ads News and Videos Portal

ராட்சசி விமர்சனம்

அரசுப் பள்ளிகள்ளிகள் அதன் ஆசிரியர்கள் எப்படி இயங்க வேண்டும் என்ற கற்பிதத்தைக் கற்றுக் கொடுக்க முயற்சிப்பதோடு, இங்கு அவரவர் தத்தமது வேலைகளை நேர்மையாகச் செய்தாலே வளரும் தலைமுறை மிளிரும் என்பதைச் சொல்லி இருக்கிறது ராட்சசி.

ஆனந்த விகடனில் கற்க கசடற என்ற தொடரை எழுதி வந்தார் அண்ணன் பாரதிதம்பி. மிக நேர்த்தியான தொடர் அது. கமிஷனைக் வாங்கிக் கொண்டு
அரசுப்பள்ளிகளுக்கு அரசியல் வாதிகள் மற்றும் அதிகாரிகள் செய்யும் அட்டுழியங்களையும், அத்திப் பூத்தாற்போல நேர்மையொழுக பணியாற்றி அறமாய் நின்று தரமான கல்வியைக் கொடுக்கும் ஆசிரியர்களையும் அந்தத் தொடர் பதிவு செய்தது. மேலும் விருதுநகரில் உள்ள சில பள்ளிகளில் சாதிக்கயிறு கட்டும் கலாச்சாரத்தையும், தனியார் பள்ளிகள் செய்யும் வழிப்பறிகளையும் தீப்பொறி பறக்க பாரதிதம்பி எழுதியிருந்தார். அந்த எழுத்தில் இருந்த வீரியம் படத்தில் மிஸ் ஆனாலும் படத்தின் பேசுபொருள் சமூகத்தின் அத்தியாவசிய தேவை சார்ந்தது என்பதால் காட்சிமொழியின் வடிவத்தை விட உணர்வுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதாய் இருக்கிறது.

தேறாது என்று முத்திரைக் குத்திய அரசுப் பள்ளிக்கு தலைமை ஆசிரியையாக தலைமையேற்று வழி நடத்தும் ஜோவுக்கு வருகிறது வழியெங்கும் தொல்லைகள். அத்தனைப் பிரச்சனைகளையும் கேள்வி கேட்டும், அறிவுரை என பெரு உரைப் பேசியும் கரைந்து போகச் செய்துவிடுகிறார்.

படத்தைப் பாடமாக்க வேண்டும் என்ற முடிவெடுத்த பின் லாஜிக் பற்றியும் எதார்த்ததைப் பற்றியும் கவலைப் பட மாட்டார்கள் சில “சமுத்திரக்கனி” வகையறா கலைஞர்கள். அந்தப் பிரச்சனை இந்தப்படத்திலும் இருக்கிறது. அது படத்தைப் பெரும் பிளவுக்குள் தள்ளாமல் ஓர் அளவுக்குள் நின்று விடுவது ஆறுதல்.

ஜோதிகாவின் நடிப்பும் பாரதிதம்பியின் வசனங்களும் தான் படத்தின் டபுள்மேன் ஆர்மிஸ். இருவிழியில் காட்டும் ஒரு முழி போதும் ஜோதிகாவுக்கு. ஜோதிகா மட்டுமல்லாமல் படத்தில் வரும் அனைவரும் நடிப்பதில் குறையே வைக்கவில்லை.

ஒரே இடத்தில் சுழலும் கதையை கண்ணுக்குச் சோர்வு ஏற்படாதபடி காட்ட உழைத்திருக்கிறார் கேமரா மேன். இசையும் பாட்டும் லாஜிக் போலவே நசநசத்துப் போய்விட்டது. முன்பாதியின் வேகமும் விவேகமும் பின்பாதியில் பாதாளத்தை நோக்கிப் போகிறது. பட் தொட்டிருக்கும் சப்ஜெட் சமாதானம் செய்கிறது.

மஹா லெட்சுமி என்ற ஒரு நல்ல டீச்சரின் இன்ஸ்பிரேஷன் தான் இந்தப்படத்தின் கதைக்கான ஆதாரம் என்று கேள்விப்பட்டோம். ஜோதிகா மஹாலெட்சுமியாகத் தான் வலம் வருகிறார். ராட்சசி அவதாரம் வேலை செய்யாதவர்களுக்கு மட்டும் தான். க்ளைமாக்ஸுக்கு அடுத்து வரும் ஒரு க்ளைமாக்ஸ் ஓவர்டோஸ். ஆனாலும் பூர்ணிமா பாக்கியராஜிடம் ஜோதிகா ஞாயிறு மதியத்தில் பேசும் அவரின் பின்கதையின் அழகும், ஒரு மாற்றுத்திறனாளி டீச்சர் வகுப்பெடுப்பதை தேன் தட்டில் தேனெடுப்பது போல செய்யும் கவித்துவ காட்சியும், கதிர் என்ற பெயரில் வரும் ஒரு குட்டிப்பையனின் அழகும் நடிப்பும், படம் நெடுக பேசப்படும் அறமும் இவையெல்லாமும் தான் ராட்சசிக்கு சல்யூட் அடிக்க வைக்கிறது.