Tamil Movie Ads News and Videos Portal

மெஹந்தி சர்க்கஸ் விமர்சனம்

நடுநிசியில் ரோட்டாரத்தில் ஒரு கப் டீயோடு இளையராஜா பாடலை கேட்கும் வாய்ப்பை பெற்றவர்கள் பாக்கியசாலிகள். அந்தப் பாக்கியசாலிகளான இயக்குநர் சரவண ராஜேந்திரனும், ரைட்டர் ராஜு முருகனும், இசை அமைப்பாளர் ஷான் ரோல்டனும், பாடலாசிரியர் யுகபாரதியும், ஒளிப்பதிவாளர் செல்வகுமாரும் இணைந்து மெஹந்தி சர்க்கஸ் படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். படத்தின் எல்லா இடங்களிலும் இளையராஜா வரவில்லை. வரும் சில இடங்களையும் ‘வர’இடங்களாக மாற்றி இருக்கிறார்கள். பஸ்ஸில் “தானா வந்த சந்தணமே” பாட்டுக்கு ஒரு ஜோடியின் ரியாக்‌ஷனை ஸ்கிரீனில் காட்டும் போது ஸ்கிரீனை ஸ்கிரீன் ஷாட் எடுத்துக் கொள்ளத் தோன்றியது. அதேபோல் “நிக்கட்டுமா போகட்டுமா”என்ற ராஜா பாட்டைப் வாட்ஸப் ஸ்டேட்டஸ் அளவுக்கு ஒலிக்க விட்டு மனசை இம்சிக்கிறார்கள்.

படத்தின் கதையுமே நாம் சந்தித்து இருக்கும் சுகமான அனுபவம் தான். 1992-ல் கொடைக்கானலுக்கு வருகிறது மெஹந்தி சர்க்கஸ்குழு . சர்க்கஸ் குழுவில் உள்ளம் அள்ளும் ஒரு வெள்ளந்தி தேவதை இருக்கிறாள். அழகான பெண்ணைப் பார்த்த பின் இளையராஜா ரசிகனான ஹீரோவுக்கு காதல் வராமல் இருக்குமா? காதல் வருகிறது. காதல் படத்தில் வரும் ஹீரோவுக்கு மட்டுமா வருகிறது?? படம் பார்க்கும் நமக்கும் தான். இன்று முப்பது +ல் இருக்கும் எல்லாரும் மெஹந்தி சர்க்கஸ் போல ஒரு சர்க்கஸைப் பார்த்திருப்போம். ஒரு அழகியை கண்டு மயங்கி இருப்போம். கதை இப்படி நம் அனுபவத்தில் இருக்கிற ஒன்றென்பதாலே நம்மோடு ஓரளவு ஒன்றுகிறது. ஓரளவு தான் ஒன்றுகிறது என்பதற்கு காரணம் இருக்கிறது.

ஹீரோ மாதம்பட்டி ரங்கராஜ் முதல் களத்திலே CSK கேப்டன் போல கெத்து காட்டி இருக்கிறார். ஹீரோயினை இன்னும் கொஞ்சநாள் பல இணைய தள ப்ரொபைல்களில் பார்க்கலாம். அழகும் நடிப்பும் ஒன்றுக்கொன்று குறையே இல்லை. ஆர்.ஜே விக்னேஷ் தான் எப்படிப் பார்த்தாலும் கதையில் அந்நியமாகவே தெரிகிறார். அதனாலே படத்திற்கு அவர் அநியாயமாக தெரிகிறார். வேல.ராமமூர்த்தியைப் பாதராகப் போட்டு அவரை வைத்தே பைபிளையும் ஜீசஸையும் குதறி இருப்பது எதற்கோ? ஆனால் அவர் நடிப்பு கச்சிதம். மாரிமுத்துவும், கத்தி வீசும் சாகச நடிகரும், கதாநாயகியின் அப்பாவும் கவனிக்க வைக்கும் நடிகர்கள்.

மனதிற்குள் மனனம் பண்ணி வைக்க வேண்டிய கதாபாத்திரங்களாக மாற வேண்டியவர்களை இயக்குநர் மேலோட்டமாக பயன்படுத்தி இருப்பதாக ஒரு சின்னகுறைபாடு மனதில் தோன்றுகிறது. அதற்கான அழுத்தமான திரைமொழியை உருவாக்கி இருந்தால் படம் இன்னும் நின்று பேசும். காதலும் பாடலுமாய் போகும் முன்பாதியில் எதார்த்தம் அதிகம் சினிமா குறைவு. பின்பாதி இது அப்படியே உல்டாவாகி விடுகிறது. வழக்கமான காதல் கதை அடுத்தடுத்த காட்சி இதுதான் என்று யூகிக்க முடியும் திரைக்கதை என படம் பழைய சரக்காக இருந்தாலும் இந்த களம் புத்தம் புதிய அனுபவம். அதுதான் படத்தை பெரிதாக காப்பாற்றுகிறது.

ராஜு முருகனின் வசனங்கள் காட்சிகளுக்கு தேவையான ஆக்ஸிஜனை கொடுத்திருக்கிறது. ஒருசில இடங்களில் வசனங்கள் துருத்தி நிற்பதும் உண்மை. ஒளிப்பதிவாளரின் சாகசம் மெஹந்தி சர்க்கஸ் எங்கும் நிரவிக்கிடக்கிறது. ஷான் ரோல்டனின் இசையும் யுகபாரதியின் வரிகளும் மெஹந்தி சர்க்கஸின் ஆன்மா.

அறிமுக இயக்குநர் சரவண ராஜேந்திரன் கோர்த்திருக்கும் பூச்சரம் ஏற்கெனவே ஏந்திக்கொண்டது என்றாலும், பூச்சரம் மீது தெளிக்கப்பட்ட பன்னீர் மணம் புதியது. அதற்காகவே மெஹந்தி சர்க்கஸுக்கு ஒரு டிக்கெட் எடுக்கலாம். மேலும் படத்தில் இளையராஜா இருக்கிறார், கடந்த கால இளைய தலைமுறைக்கும் நிகழ்கால இளைய தலைமுறைக்கும் பிடிக்குமளவில் ஒரு காதல் இருக்கிறது. வேறென்ன வேண்டும்?