Tamil Movie Ads News and Videos Portal

மகாமுனி விமர்சனம்

கொலைகளுக்கு ஸ்கெட்ச் போட்டு பிழைக்கும் மகாவுக்கும், வாழ்வில் பிழைகளே இல்லாமல் வாழும் முறையை கற்று பிறருக்கும் அவற்றை கற்றுக்கொடுக்கும் முனிக்குமான வாழ்க்கை நிகழ்வுகள் தான் மகாமுனி.

எட்டாண்டுகளுக்குப் பிறகும் அத்திவரதர் போல அபாரமாகத் தான் எழுந்திருக்கிறார் இயக்குநர் சாந்தகுமார். முரண்பட்டவர்களோடு பயணிக்கும் போதும் அன்பால் உடன்பட்டு சமாதானம் ஆகும் மனிதத்தின் பேரன்பை படம் பேசி இருக்கிறது என்பது எனது நம்பிக்கை. ஆன்மீக நெறியில் செல்லும் முனி ஆர்யாவிற்கு கடவுள் நம்பிக்கை அதிகம். இந்து நெறியை அவர் கடைபிடிப்பதும் கண்கூடு. அவர் கையில் அம்பேத்கர் புத்தகமும் உண்டு. மகிமா நம்பியாருக்கு கடவுள் பற்றிய பெரிய அபிப்ராயம் கிடையாது. ஆனால் ஆன்மீக ஆர்யா மீது ஒரு பெரும் மரியாதை உண்டு. கொலை என்பதை இலை போட்டு சாப்பிடுவது போல பேசும் மகா ஆர்யாவுக்கு பயந்தாங்கொள்ளி மனைவி இந்துஜா. ஆனால் இருவருக்குள்ளும் அப்படியொரு நேசம் ஒட்டிக்கிடக்கும். இப்படி குணங்களில் செய்ல்களில் முரண்பட்டு இருந்தாலும், அன்பில் உடன்பட்டு நிற்பது தானே மாஸான மனிதம். படத்தின் லீட் கேரக்டர்கள் இதைச் செய்கின்றன.

இரு ஆர்யாக்களுக்கும் தனித்தனியாக நடக்கும் சம்பவங்கள் எப்போது ஒரு இடத்தில் ஒன்றாக இணையும் என்ற எதிர்பார்ப்பை எகிறவைத்து இடைவேளை விடும்போது அடடா என்கிறது மனம்.

ஆனால் அந்த டெவலப்மெண்ட் ஏரியா எனப்படும் இரண்டாம் பாதி அநியாயத்திற்கு சறுக்குகிறது. மிக முக்கியமாக இடைவேளை வரை உலக தத்துவங்கள் பேசும் முனி கேரக்டர் ஒரு பாம்புகடி விசயத்தில் இத்தனை அப்பாவியாக ரியாக்ட் பண்ணுமா? மெகா பெரிய ஸ்கெட்ச் பார்ட்டியான மகா ஆர்யா இவ்வளவு வெள்ளந்தியாக இருப்பாரா? மகிமா நம்பியார் கேரக்டர் முற்போக்குவாதி, பெரியாரிஸ்ட் என்றபோதும் ஒரு இடத்தில் குழாயடிச் சண்டைபோல மல்லுக்கட்டி நிற்பது எல்லாம் எந்த ஊரு லாஜிக்?

தமனின் இசை முனியின் தவத்திற்கு சரியான வரத்தை அளித்திருப்பதும், அருண்பத்பநாபனின் கேமரா ஈரோடு அருகேயுள்ள ஆற்றையும், சென்னைக்கு அருகில் உள்ள ஏரியாக்களையும் துல்லிய அழகியலோடு காட்டி இருப்பதும் பேராறுதல்.

ஆர்யா நடிப்பில் பல வருடமாக ஆர்யாதான் தெரிந்தார். இந்தப்படத்தில் தான் நடிகர் ஆர்யாவை கண்கள் கண்டுகொண்டன. மகிமா, இந்துஜா இருவரும் சரிவர பயன் படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

ஜெயப்பிரகாஷை வைத்து சாதி அரசியலைப் பேச நினைத்ததும், முனி ஆர்யாவை வைத்து மத அரசியலைப் பேச நினைத்ததும், இளவரசை வைத்து முறையற்ற கரன்ட் பாலிட்டிக்ஸைப் பேச நினைத்ததும் நல்ல சிந்தனை தான். ஆனால் அதனால் படத்திற்கு பெரிய யூஸ் இருக்குதா?

மகா என்பவன் தன் அடிப்படைத் தேவைக்காகவே கொலைகள் செய்தாலும் மகா கெட்டவன். துரும்புக்கு கூட தீங்கிழைக்காத முனி அத்தனை நல்லவன். சோ மகாக்கள் எல்லாம் முனிகளாக மாறினால் தான் உருப்படும் என்றும், அப்படி நல்லவனாக மாற பெரும்புயலில் ஆற்றைக் கடக்க வேண்டியதிருக்கும் என்பதாகவும் ஒரு ஷாட் படத்தின் க்ளைமாக்ஸில் வரும். அது ரொம்ப நல்லாருந்தது. உலகத்தரத்தில் தமிழ்சினிமா இல்லதான். ஆனால் உள்ளூர் தரத்தில் நல்லசினிமா.