”பொள்ளாச்சி சம்பவம்” குறித்து பாக்யராஜ் சர்ச்சைக் கருத்து
அறிமுக இயக்குநர் ராகுல் இயக்கியுள்ள “கருத்துக்களைப் பதிவு செய்” படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய நடிகரும் இயக்குநருமான பாக்யராஜ், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் பெண்கள் மீதும் தவறு இருக்கிறது என்று பேசியது மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அவர் பேசும் போது, “பொள்ளாச்சி சம்பவத்தில் அந்த ஆண்கள் மட்டுமன்றி பெண்களிடமும் தவறு இருக்கிறது. தற்போது பெண்கள் அதிகமாக செல்போன்களைப் பயன்படுத்துவதாலும், மணிக்கணக்காக அதில் பேசிக் கொண்டு இருப்பதாலும் தான், இது போன்ற தவறுகள் நடக்கிறது. பெண்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று கட்டுக்கோப்பாக நடத்தப்பட்ட காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நிகழ்ந்தது இல்லை. ஆண் சின்ன வீடு வைத்துக் கொண்டால் அது பணம், காசு செலவீனத்தோடு போய்விடும். ஆனால் தற்போதோ பெண்கள் தன் கணவனைக் கொல்வது, குழந்தையைக் கொல்வது என எல்லாவற்றிற்கும் துணிந்து விட்டனர்..” என்று பேசியுள்ளார். இதற்கு பெண்கள் அமைப்பு மத்தியில் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
”ஜெயலலிதாவிற்கு பொருத்தமான தேர்வு நான் தான்” – நித்யா மேனன்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை திரையில் கொண்டு வரும் முயற்சியில் பலரும் இறங்கியுள்ளனர். இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் ரம்யாகிருஷ்ணணை ஜெயலலிதாவாக நடிக்க வைத்து ஒரு வெஃப் சீரிஸ் ஒன்றை இயக்கியுள்ளார். இயக்குநர் விஜய் இந்தி நடிகை கங்கணா ரனாவத்தை ஜெயலலிதாவாக நடிக்க வைத்து “தலைவி” படத்தின் படப்பிடிப்பை தொடங்கவுள்ளார். அது போல் இயக்குநர் பிரியதர்ஷிணி நடிகை நித்யா மேனனை ஜெயலலிதாவா நடிக்க வைத்து, “தி அயர்ன் லேடி” படத்தை தொடங்கியுள்ளார். இந்த இரு படங்களின் முதல் பார்வை தோற்றம் சமீபத்தில் வெளியானது. அதில் கங்கனா ரனாவத்தைப் பார்க்க ஜெயலலிதா போல் இல்லை; வேறு யாரோ போல் இருக்கிறார் என்ற கருத்து மேலெழுந்தது. இந்நிலையில் நித்யா மேனன், “ஜெயலலிதாவாக நடிப்பதற்கு நான் தான் சரியானத் தேர்வு, என் பள்ளி நாட்களை நானும் ஜெயலலிதாவைப் போல் சில காலம் பெங்களூருவில் கழித்திருக்கிறேன். ஜெயலலிதாவைப் போலவே நானும் என் மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசுபவள், இப்படி எனக்கும் அவருக்கும் பல ஒற்றுமைகள் இருக்கின்றன. எனவே ஜெயலலிதா வேடத்தில் நடிப்பதற்கு நானே பொருத்தமான தேர்வு..” என்று கூறியிருக்கிறார்.