ஒரு ஷாட், ஒரு சாங், ஒரு பார்வை..அவ்ளோ தான்.. டோட்டல் தியேட்டரும் அவர் கன்ட்ரோல். அதான் ஒரே சூப்பர் ஸ்டார் என்பது!
ஹாஸ்டலுக்கு வெளியில் நைட் எபெக்டில் நல்ல லைட் மூடில் நாற்காலியில் அமர்ந்து ஒரு பார்வை பார்க்கிறார் ரஜினி. பக்கத்தில் வைத்திருக்கும் ரேடியோவில் ஒரு பாடல் வருகிறது, “மலர்ந்தும் மலராத பாதிமலர் போன்ற” பாட்டு அது. அந்த ஒரு ஷாட்லே மனம் ரஜினியிடம் போய்விட்டது. “என்னைக்குமே மாஸ்ன்றது ரஜினியின் கோட்டை” என்பதை நிரூபித்து இருக்கிறது பேட்ட.
நண்பனுக்கும் தனக்கும் ஜென்ம வலி கொடுத்தவனை ரஜினி வேரோடு பலி தீர்க்குற ஒருவரி தான் கதை. அது கார்த்திக் சுப்புராஜின் திரைமொழியில் பயணிக்கும் போது தரமான சம்பவமாக மாறுகிறது.
நவாசுதின் சித்திக், விஜய்சேதுபதி, சசிகுமார், பாபிசிம்ஹா, குரு சோமசுந்தரம் என ஹீரோக்கள் எல்லாம் ரஜினியைச் சுற்றி. ஆனாலும் இது ரஜினி படம். அதைச் சாத்தியமாக்கி இருப்பது ரஜினியின் எனர்ஜிடிக் நடிப்பு. சிகரெட் கேட்கும் விஜய்சேதுபதியிடம் அவர் சிகரெட் கொடுக்கும் விதமும், அப்போது அவர் பேசும் வசனமும் அப்ளாஸ் அப்ளாஸ். அனிருத்தின் ஒவ்வொரு நரம்புக்குள்ளும் ரஜினி வெறியன் குடி கொண்டிருப்பான் போல. ஓவர் டைம் வேலை பார்த்திருக்கிறார். மரணம் மாஸு மரணம் என்பது ரஜினிக்கு மட்டும் அல்ல. அனிருத்துக்கும் பொருந்தும். அட்டகாச சாங்ஸ்..அமர்க்களமான பேக்ரவுண்ட். வெகு சொற்பமான இடங்களில் மட்டும் ஓவர் இரைச்சல்.
திருவின் கேமரா படத்தில் சலங்கை கட்டி ஆடி இருக்கிறது. மதுர பேட்டயும் குளுகுளு குளிர் பிரதேசமும், ரத்தவெறி உத்திரப்பிரதேசமும் திருவின் ஒளிப்பதிவில் படத்தைத் தூக்கி கொண்டாட வைக்கிறது.
இடைவேளை வரை இடியென பாயும் திரைக்கதை அதன் பிறகு நொடிந்து நொண்டியடிக்கும் சோகத்தை தந்துவிடுவது சின்ன மைனஸ்.
அதேபோல் பிரமதர் அலுவலகத்தில் இருந்து ரஜினிக்கு ரெக்கமண்ட் பண்றதுக்கான காரணம் என்ன? ப்ளாஸ்பேக்கில் வரும் மதுர சம்பவங்களின் காலகட்டம் என்ன? பேட்ட காளியாக மாறியது எப்படி? அவ்வளவு செல்வாக்குள்ள ரஜினி ஏன் 20 வருடம் பொறுத்திருந்தார்? போன்ற லாஜிக் கேள்விகளும் கலந்து கட்டி அடிக்கிறது தான். ஆனால் படம் காட்டும் மேஜிக்கில் அதெல்லாம் தூசுபோல பறந்தும் விடுகிறது. சமகால அரசியல் சமாச்சாரங்களை சமார்த்தியமாக கையாண்டிருப்பது இயக்குநரின் புத்திசாலித்தனம். ஆன்டி இண்டியன்ஸ் போன்ற டயலாக், காதலர்களை அடித்து விரட்டும் ஆர் எஸ் எஸ் குருப்களின் அடாவடி காட்சிகள் என சில இடங்களில் உள்குத்து நிரம்பி வழிகிறது. ஆனால் படத்தின் இறுதியில் ரஜினியே பகவான் கிருஷ்ணனின் வழியை பின்பற்றுவதாக டயலாக் பேசி சமாதானமும் செய்துவிடுகிறார். (ஊசியால குத்தவும் செய்வோம், பஞ்சால தடவியும் விடுவோம்)
சிம்ரன் திரிஷா மேகா ஆகாஷ் போன்ற நடிகைகள் படத்தில் இருக்கிறார்கள். ரஜினி படத்தில் நவாசுதீன் சித்திக்கே ஓரமாக நிற்கும் போது இவர்களை பெரிய அளவில் பயன்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாதல்லவா?
மூன்று மணி நேரம் அதிகம் என்ற கமெண்ட்ஸை பலபேர் சொல்லலாம். ஆனால் அதற்கான தேவை கதையிலே இருக்கிறது. க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் பலருக்கும் சின்ன ஏமாற்றத்தைத் தரலாம். அதேநேரம் ஆச்சரியத்தையும் தரலாம். அதைப்பற்றி இரண்டுவிதமாக கமெண்ட்ஸ்கள் வருகின்றன. செம்மயா ஒரு ரஜினி படம் பார்க்கணும் என்ற விருப்பம் உள்ளவர்கள் உல்லாலா பாடிக்கொண்டே ஜாலியாக ‘பேட்ட’க்குள் போய் வரலாம். மனுசன் அடிச்சித் தூக்கி இருக்கிறார்.