நாகஷேகர் மூவிஸ் – ஜோனி பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குனர் நாகஷேகர் தயாரித்து, கதை எழுதி, நடித்து இயக்கும் ‘நவம்பர் மழையில் நானும் அவளும்’
கன்னட திரையுலகில் பல வெற்றித் திரைப்படங்களை தந்த வெற்றிகரமான இயக்குனர் நாகஷேகர். தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான நாகஷேகர் மூவிஸ் மூலம், ஜோனி பிலிம்ஸ் சார்பாக ஜோனி ஹர்ஷா, ஷிவு எஸ் யசோதரா ஆகியோருடன் நாகஷேகர் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் ‘நவம்பர் மழையில் நானும் அவளும்’. இப்படத்தை கதை எழுதி, இயக்கும் அவர், முக்கிய வேடத்திலும் நடிக்கிறார்.
‘அரண்மனை’ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக உயர்ந்த நாகஷேகர், அதனைத் தொடர்ந்து ‘சஞ்சு வெட்ஸ் கீதா’, ‘மைனா’ ஆகிய வெற்றிப் படங்களைத் தந்த ஒரு ஜனரஞ்சகமான இயக்குனர். ‘ரெபல் ஸ்டார்’ அம்பரீஷ் – சுமலதா தம்பதியின் வாரிசான அபிஷேக்கை ‘அமர்’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகப்படுத்தி, பெரு வெற்றியடையச் செய்த பெருமைக்குரியவர்.
முற்றிலும் புதிய பரிமாணத்தில், ஒரு வித்தியாசமான கதைகளத்துடன், மென்மையானதொரு காதல் கதையான ‘நவம்பர் மழையில் நானும் அவளும்’ திரைப்படத்துடன் தமிழ் திரையுலகில் தடம் பதிக்கிறார் நாகஷேகர்.
சத்யா ஹெக்டே ஒளிப்பதிவு செய்ய, பிரீத்தம் திரைகதை எழுத, இயக்குனர் விஜி வசனம் எழுத, ரூபன் படத்தொகுப்பை கவனிக்க, லால்குடி N.இளையராஜா கலை இயக்கத்திற்கு பொறுப்பேற்கிறார்.
இப்படத்திற்கு மதன் கார்க்கி பாடல்களை எழுத, ஷபிர் இசையமைக்கிறார். சண்டை காட்சிகளுக்கு திலீப்சுப்புராயன் பொறுப்பேற்க, நிர்வாக தயாரிப்பு வேணு வேல்முருகன் வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.
வசூலில் சாதனை படைத்த இயக்குனர் நாகஷேகரின் கன்னடப் படம் ‘மைனா’, மொழி மாற்றம் செய்யப்பட்டு தமிழில் ‘முதல் மழை’ என்ற பெயரில் வெளியீட்டுக்கு தயாராக இருக்கும் நிலையில், இப்புதிய திரைப்படம் குறித்து இப்படக் குழுவினர் செய்தி வெளியிட்டு இருக்கிறார்கள்.