Tamil Movie Ads News and Videos Portal

நடிகர் சங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு.

நடிகர் சங்க தேர்தல் முடிவுகள் வெளியிடப்படாத நிலையில் தமிழக அரசு நடிகர் சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியை நியமித்தது குறித்து சங்கத்தின் சார்பில் உறுப்பினர்கள் நாசர், கார்த்தி, மனோபாலா, சச்சு, பூச்சி முருகன் ஆகியோர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

அவர்கள் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த விபரம் வருமாறு:-

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் கடந்த தேர்தல் முதல் எங்கள் அணி சட்ட ரீதியாகவே அணுகி வருகிறது. முந்தைய அணிகள் செய்த தவறுகளை நாங்கள் செய்யக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம். இம்முறை தேர்தலுக்கு பல பிரச்சனைகள் வந்த போதிலும் அவற்றை சட்ட ரீதியாகவே சந்தித்தோம். இப்போது சங்கத்தை நிர்வகிக்க நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரிக்கு எங்கள் ஒத்துழைப்பை அளிப்போம். அது எங்கள் கடமை. ஆனால், எங்கள் மீது எந்த ஒரு குற்றச்சாட்டுகளும் வைக்க முடியாத நிலையில் இதனை ஜனநாயக படுகொலையாகவே பார்க்கிறோம். ஆனால், அனைத்தையும் சட்ட ரீதியாகவே சந்திப்போம் என்று உறுதி கூறுகிறோம்.

அதிகாரிக்கு ஒத்துழைப்பு அளிக்கிறேன் என்கிறீர்கள் அப்படியானால் இதனை ஏற்றுக்கொள்கிறீர்களா ?

இல்லை. ஆனால் அவர் இன்று பொறுப்பேற்று கொண்டார் என்கிற போது அவருக்கு ஒத்துழைத்து கணக்கை ஒப்படைப்பது எங்களது கடமை. ஆனால் இதனை சட்டப்படி நாங்கள் எதிர்கொள்வோம்.

விஷால் அரசியலில் ஈடுபட்டதால் தான் இந்த பிரச்சனை நடப்பதாக சொல்வது பற்றி?

இது முழுக்க முழுக்க யூகத்தின் அடிப்படையாலானது. அவர் மீது குற்றமே சொல்லவில்லை எனும்போது ஏதாவது ஆதாரத்தின் படி குற்றம் சாட்டினால் நடவடிக்கை எடுக்கலாம் அப்படி எதுவுமே இல்லையே.

அமைச்சர்களை சந்தித்தீர்களா ?

சந்தித்தோம். ஆனால், அது பற்றி வெளியிட முடியாது. பிரச்சனை என்னவென்றால் கடந்த ஏப்ரல் மாதம் வரை பென்சன் அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. இப்போது வழக்கு நடப்பதால் கட்டடம் கட்டுவது தொடர்பாக எதுவும் நடக்க வாய்ப்பில்லை. அடுத்த உறுப்பினர்கள் வந்து பொறுப்பேற்றால் தான் எல்லாம் நடக்க முடியும். ஆனால், நடிகர் சங்கத்தில் உதவி பெறுபவர்கள் சிலர் வழக்கு தொடர்கிறார்கள். அவர்களுக்கு ஆஜராகும் வக்கீல்கள் லட்சங்களில் ஃபீஸ் வாங்குபவர்கள். இதன் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். நியாயமான தீர்வு கிடைக்கும் என நம்புகிறோம். அதற்கு சட்டப்படி போராடுவோம் என்றார் கார்த்தி.

அரசு சங்கத்திற்கு எதிராக இருக்கிறதா?

அதனை நீங்கள் தான் சொல்ல வேண்டும்.

சிறப்பு அதிகாரியால் என்ன பிரச்சனை?

முன்னால் முதல்வர்கள் பலரும் பங்கு கொண்ட அமைப்பு தான் இந்த நடிகர் சங்கம். நாங்கள் வந்த பிறகு கடனை அடைத்திருக்கிறோம். கட்டடம் கிட்டதட்ட முடித்திருக்கிறோம். ஆனால், பிரசவ நேரத்தில் இதனை நிறுத்தி வைத்துள்ளார்கள்.

அரசு ஏன் சங்கத்திற்கு எதிராக இருப்பதாக நினைக்கிறீர்கள்?

அரசு அப்படி இல்லை என்றே நம்புகிறோம். ஆனால் இப்போது நடக்கும் பிரச்சனைகள் அனைத்தையும் சட்ட ரீதியாக சந்தித்து வெல்ல முடியுமென்று நம்புகிறோம். பத்திரிகைகளை நம்புகிறோம்.

கடைசியாக பூச்சி முருகன் அவர்கள்
இப்போது நடந்து கொண்டிருப்பது ஜனநாயக படுகொலை இதனை பத்திரிகையாளர்கள் தான் தட்டிக்கேட்க வேண்டும் என்றார்.