மனிதனுக்கு திருமணம் அவசியம் தான். ஆனால் அந்த திருமணத்தில் எவையெல்லாம் அவசியம் என்பதைப் பேசுகிறது சேரனின் திருமணம்.
திட்டமிடாத வாழ்க்கை தெருவுல தான் நிக்கும் என்பதை மனதில் கொண்டு சிக்கனத்தை சிக்கென பிடித்து வாழும் சேரனுக்கு தங்கையை மனதுக்குப் பிடித்த பையனோடு சேர்த்து வைக்கவேண்டும். மாப்பிள்ளையின் அக்கா சுகன்யாவிற்கு தம்பியின் திருமணத்தை ஆடம்பரமாக நடத்த வேண்டும்..சிக்கன சேரனுக்கும் கெத்தான சுகன்யாவிற்கு இடையே எழும் முரண்கள் எப்படி தீர்ந்தது?, இருமனங்கள் காதலால் ஒருமனம் ஆன பின் அந்த திருமணம் எப்படி நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை.
வாழ்வில் மறக்க முடியாத படங்களைத் தந்த சேரனை திருமணத்தில் தொலைந்து போன குழந்தையைப் போல் தேட வேண்டியுள்ளது. படத்தில் அவர் பேசி இருக்கும் அத்தனை விசயங்களும் அட்சயப்பாத்திரம் தான். இன்னும் எத்தனை காலம் வேண்டுமானாலும் அதில் இருந்து ஒரு கருத்தை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் அவர் பேசிய விதம் தான் உறுத்துகிறது. மனதில் ஆழப்பதிய வைத்துக்கொள்ளும் அளவில் ஒருகாட்சியும் இல்லை. வெறும் வசனங்களாகவே நிறைய காட்சிகள் கடந்து போவதால் சற்று நேரத்திற்குள்ளாகவே படத்தின் தாக்கம் மறந்து போய்விடுகிறது. மற்றபடி நடிகர் சேரன் இன்னும் இயக்குநர் சேரனாகவே தான் இருக்கிறார். சுகன்யாவுக்கு நல்ல கம்பேக் இந்தப்படம். தம்பி ராமையா மகன் உபாபதி தான் படத்தின் நாயகன். படத்தில் கதை தான் நாயகனாக இருப்பதால் அவரும் வந்துபோனவர் போல தான். ஹீரோயின் காவ்யா பால சரவணன், மனோபாலா, ஜெயப்பிரகாஷ் ஆகியோர் படத்தின் சின்னப் சின்னப் பில்லர்கள். திருமணத்தின் மிக முக்கிய விருந்தாளிகள் தம்பி ராமையா மற்றும் எம்.எஸ் பாஸ்கர் தான். இவர்களின் அனுபவம் வாய்ந்த நடிப்பும் அங்கங்கு தூவிச் செல்கிற வசனங்களும் தான் திருமணம் சலிப்பில்லாமல் நகர பெருங்காரணம்.
ஆட்டோகிராஃப் படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு பூக்களுமே பாடலை 32 முறை மாற்றி எழுதி வாங்கினாராம் சேரன். இது பாடலாசிரியர் பா.விஜய் சொன்னது. படத்தில் இடம்பெறும் பாடல்களுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கும் சேரன் இந்தப்படத்தில் பாடல்களை கண்டுகொள்ளவே இல்லைபோல. பாடல் பின்னணி இசை இரண்டுமே மங்கிப் போன நாதஸ்வரத்தில் இருந்து வரும் ஓசையாக இருக்கிறது.
ஒரு பணக்கார குடும்பம் திருமணத்திற்காக செய்யும் ஆடம்பர செலவுகளைப் பார்த்து நடுத்தர குடும்பங்களும் செலவு செய்வதற்குப் பின்னால் இருப்பது கார்ப்பரேட் கவர்ச்சி என்பதை நுட்பமாக புரிய வைத்தமைக்காக மட்டுமே திருமணத்திற்கு செல்லலாம்!