மடத்தனமும் அயோக்கியத்தனமும் சேர்ந்தால் தான் இப்படியெல்லாம் ஒரு படத்தை எடுக்க முடியும்.
எமனான ராதாரவிக்கு வயதாகிவிட அவர் தனது மகன் யோகிபாபுவுக்கு பட்டாபிஷேகத்தைச் சூட்டுகிறார். (கலைஞருக்கு வயதானதும் ஸ்டாலின் செயல் தலைவர் ஆன குறியீடு) ஆனால் சித்ரகுப்தனுக்கு அதில் கொலகாண்டு. அவருக்கு எமன் பதவி மேல் ஓர் ஈர்ப்பு. அதனால் எமனை காலி பண்ண பூலோகத்திற்கு கூட்டிவந்து ஒரு சிக்கலில் கோர்த்து விடுகிறார். அந்தச் சிக்கல் மக்களுக்கும் சிக்கலாக (மக்கள் என்றால் படம் பார்க்கும் மக்களுக்கும் தான்) முடிவில் யோகி என்ன செய்தார் என்பதே கர்மபிரபு. ‘த’ ஸ்பெல்லிங் மிஸ்டேக் எல்லாம் இல்லை
காமெடி என்பது வேறு கலாய்ப்பது என்பது வேறு. படத்தில் எங்குமே காமெடி இல்லை. முழுக்க முழுக்க கலாய்ப்பு தான். ஒரு சில கலாய்ப்புகளுக்கு சிரிக்க முடிகிறது என்பது ஓரளவு உண்மையும் கூட. அதுக்காகவெல்லாம் இந்தப்படத்தை சிபாரிசு செய்ய முடியாது. அதற்கான காரணம் கீழே!
படத்தின் இயக்குநர் முத்துக்குமரன் ஒரு பெரியாரிஸ்ட் என்று சொல்லிக்கொண்டார். இவரை விட பெரியாரை கேவலப்படுத்த ஹெச்.ராஜாவால் கூட முடியாது. இந்து மதத்தின் அத்தனை மூட நம்பிக்கைகளையும் எதிர்த்தவர் பெரியார். குறிப்பாக செத்த பிறகு வரும் மோட்சம் நரகம் என்ற விஷயங்களை மூத்திரச் சந்துக்குள் விட்டு அடிப்பதைப் போல விளாசியவர் பெரியார். இந்தப் படத்தில் எமலோகத்தில் வந்து பெரியார் யோகிபாபுவிற்கு ஐடியா கொடுப்பார். எவ்வளவு கேவலம்!
போகட்டும். பெரியாரிஸ்ட் என்றால் பெண்களை எப்படிச் சித்தரிக்க வேண்டும்? இந்தப்படத்தில் யோகிபாபுவிற்கு சாமரம் வீசும் பெண்களை வச்சி செய்திருக்கிறார்கள். முக்கியமாய் யோகிபாபு பெண்களை உருவக கேலி செய்து உள்ளம் மகிழ்கிறார். பெண்கள் உரிமையெல்லாம் பூலோகத்தில் தான் இங்கே கிடையாது என்கிறார் எமன். அடுத்தப் ப்ளோரில் தான் பெரியார் அம்பேத்கர் இருக்கிறார்கள். அடப்பாவிங்களா!
இந்துமதமே வேண்டாம் என்று புத்தமதத்தை தழுவிய அம்பேத்கரை சட்டப்புத்தகத்தோடு வந்து எமதர்மனுக்கு ஐடியா கொடுக்க சொன்னதெல்லாம் கேவலவாத சிந்தனை. குறிப்பாக காந்தியடிகளை எவ்வளவு தூரம் முடியுமோ அவ்வளவு தூரம் இறங்கி அடித்திருக்கிறார்கள்.
பிரதமர் மோடியை கலாய்ப்பதாலோ, பத்திரிகையாளர் சோ-வை மகா மட்டமாக சித்தரிப்பதாலோ இந்தப்படம் இந்துத்துவ அரசியலுக்கு எதிரான படம் என்று நினைத்து மக்கள் நம்மைக் கொண்டாடி விடுவார்கள் என்று இயக்குநர் நினைத்திருக்கிறார். கொள்கையை விமர்சிப்பது வேறு, தனி மனிதனை விமர்சிப்பது வேறு என்ற வித்தியாசம் தெரியாத கூ முட்டைகளா மக்கள்? எவ்வளவு வன்மம் இருந்தால் இப்படியெல்லாம் சித்திரிக்க முடியும்.
உறியடி2 படத்தில் உருவத்தில் தொல்.திருமாவளவன் போலவே ஒரு வில்லன் கேரக்டரை உருவாக்கி அவரை அசிங்கப்படுத்தி இருந்தார்கள். இந்தப்படத்தில் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸை குறிவைத்து அடித்திருக்கிறார்கள். ராமதாஸின் சந்தர்ப்பவாத அரசியலையும், சாதிவெறி போக்கையும் விமர்சியுங்கள். அது தவறே இல்லை. ஆனால் ராமதாஸ் என்ற தனிமனிதனை விமர்சிக்கும் உரிமையை உங்களுக்கு யார் கொடுத்தது. அதேபோல் இந்து மதத்தின் கடவுளான சிவனை யோகிபாபு டேய் அங்கிள் என்கிறார். ஒரு சாரார் மக்களின் உணர்வுகளை புண்படுத்தாமல் படம் எடுக்கத் தெரியாதவர் எல்லாம் எப்படி படைப்பாளி லிஸ்டில் வர முடியும்? இதேபோல் யேசுவையோ அல்லாவையோ ஒரு வார்த்தைச் சொன்னால் என்ன நடக்கும் என்பது இயக்குநருக்குப் புரியும். அதனால் தான் சிவனை கை வைத்திருக்கிறார். யாரை குளிர்விக்க இந்த மட்டமான சிந்தனை?
முருகனிடம் ஒரு ஹீரோ வள்ளியை நீ உஷார் பண்ணுனியே முருகா என் காதலுக்கும் ஒரு வழிகாட்டக் கூடாதா? என்று ஒரு காட்சி வைப்பதில் இழிவு ஒன்றும் இல்லை. ஏன் என்றால் முருகன் வள்ளியை காதலித்து கவர்ந்தான் என்பது இந்துக்களின் நம்பிக்கை. ஆனால் சிவபெருமான் போர்த்தி இருக்கும் புலித்தோல் நாத்தமடிக்கிறது என்று வசனம் வைப்பது எல்லாம்……இந்து மதமாவது மயிறாவது என்ற லெவல் கற்பனை அல்லவா?
ஒருநாளில் படுத்துக் கொள்ளும் ரசனையற்ற படத்தை, சினிமா எவ்வளவு தூரம் முன்னேறிவிட்டது என்ற நாலேஜ் இல்லாத படைப்பாளியை இப்படி விமர்சித்து ஒரு ப்ரோமோஷன் கொடுக்கணுமா என்று சிலர் கேட்கலாம். என்னவோ இதைச் சாதாரணமாக கடந்து போக முடியவில்லை.
கடவுளை நம்புகிறவன் (இந்துக் கடவுளை) எவனுக்குமே அறிவு கிடையாது என்பவர்களுக்கு இந்த விமர்சனம் சங்கியின் புலம்பலாகத் தெரியலாம். எல்லாச் சட்டையையும் கழற்றி வைத்துவிட்டு இந்தப்படத்தைப் பாருங்கள். துளிகூட படைப்பு நெறி இல்லாத மனித வெறி படம் என்பது உங்களுக்குப் புரியும்.