தடைகளைத் தாண்டி வெளிவரும் ஆற்றலை விட தடைகளைத் தாக்கி வெளிவரும் ஆற்றல் வீரியமிக்கவை. இயக்குநர் மகிழ்திருமேனி தடைகளை தாக்கி மேல் எழுபவர். திரையில் அவரது ரைட்டிங் எப்போதுமே நேர்த்தியாக இருக்கும். அது தடம் படம் மூலமாக அழுத்தமாக நிரூபிக்க பட்டிருக்கிறது.
பழைய கரும்புச் சாறு என்பதை எறும்பு ஆராய்வதில்லை. அதுபோல் விறுவிறுப்பும் பரபரப்பும் தீப்பிடிக்கும் ஒரு படத்தில் ஒரு நூல் அளவில் லாஜிக் ஓட்டைகள் இருந்தாலும் ஆடியன்ஸ் அதை மறந்தோ மன்னித்தோ விடுவார்கள். தடம் படத்திலும் அதுதான் நடந்துள்ளது. ஒரு தடயத்தை தேடுவதில் இந்தளவுக்கா போலீஸ் வீக்-ஆக இருப்பார்கள் என்ற சிங்க மூளை யோசித்தாலும் அதை மூலையில் தூக்கிப்போட்டுவிட வைத்துவிடுகிறது படத்தின் ஸ்கிரீன் ப்ளே!
ட்வின்ஸ் அருண்விஜய் இருவரில் ஒருவர் ஒரு கொலை செய்கிறார். போலிஸ் இருவரையும் விசாரணை செய்கிறார்கள். இருவரில் யார் குற்றவாளி என்பதை கண்டுபிடிக்க காவல்துறை மண்டை காய்கிறார்கள். இருவருமே தாங்கள் தப்பிப்பதற்காக காய் நகர்த்துகிறார்கள். இதுதான் தடம் படம்.
ஒவ்வொரு காட்சிகளிலும் அத்தனை டீடெயில் வொர்க். கண்ணை மயக்கும் ஒளிப்பதிவு, காட்சிகளை உறுத்தாத வசனங்கள், கத்தியை விட ஷார்ப்பான எடிட்டிங், விதிநதியே என வசீகரிக்கும் மதன்கார்க்கி வரிகள், உணர்வுகளுக்கு முழு உயிர் கொடுத்திருக்கும் பின்னணி இசை என தடத்தை அத்தனை டெக்னிஷியன்ஸும் காதலித்து காதலித்து உருவாக்கி இருக்கிறார்கள்.
இந்தப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் இயக்குநர் மகிழ்திருமேனி, “அருண்விஜய் இந்தத் தலைமுறையின் மிகச்சிறந்த நடிகன். அவருக்குச் சரியான இயக்குநர்கள் கிடைத்தால் அவர் மிகப்பெரிய உயரத்திற்குச் செல்வார்” என்று சொல்லிருந்தார். அந்த வார்த்தைகளுக்கு நியாயம் சேர்த்து நடித்திருக்கிறார் அருண்விஜய். இரண்டு ஹீரோயின்களின் தேர்வுக்காக இயக்குநருக்கு தேன்கலந்த டீ பார்சேல்ல்ல். என்னா விழிகள், என்னா முகபாவனைகள்! மேலும் பெண் காவல் அதிகாரி கேரக்டர் ஒன்று படத்தை அதகளப்படுத்தி இருக்கிறது. லாஸ்ட் மினிட்டில் அவர் கொடுக்கும் ரியாக்ஷன் அல்டிமேட். பெப்சி விஜயனை எல்லாம் தமிழ்சினிமா ஏன் இன்னும் சரியாக பயன்படுத்தவில்லை. மனிதர் முகத்தில் ஏற்படும் வன்மமும் கோபமும் தெறித்து ஓட வைக்கிறது. அட்டகாசம் மாஸ்டரே! இவர்கள் போக படத்தில் ஒரு ஷாட்டில் வரும் நடிகர்கள் கூட செம்ம ஷாட் அடிக்கிறார்கள். அதனாலே காட்சிக்கு காட்சி சிக்ஸர் அடிக்கிறது படம். சோனியா அகர்வால் நன்றாகவே நடித்திருந்தாலும் அந்தப் போர்ஷன் கொஞ்சமே கொஞ்சம் இழுவை. ஆனாலும் அதுதான் படத்தின் ஆன்மா என்பதால் விடவும் முடியவில்லை.
இந்திய நாட்டின் சட்டங்களில் சில ஓட்டைகள் இருப்பதற்கான காரணம், ஒரு நிரபராதி தண்டிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காகத் தான் என்பதை சுட்டி காட்டி இருக்கும் படம், அதற்கான நியாயத்தையும் திரையில் காட்டி இருப்பது நிறைவு.
படமும் அப்படித்தான்!
நிறைவு!