யுத்தத்திற்கு வீரம் மட்டும் போதாது. அதற்கு வேதம் தெரியவேண்டும், தன்னை வெல்லும் சூட்சமம் சொல்லும் தியானத்தில் மூழ்கி தெளிய வேண்டும். பாரதமாதாவின் திலகம் நெற்றியில் ஜொலிக்க வேண்டும் போன்றவற்றை குரு மற்றும் மாதா மூலமாக கற்றுக்கொள்ளும் நரசிம்ம ரெட்டி பிரிட்டிஸுக்கு வரி கட்ட மறுக்கிறார். நம் மண் நம் உரிமை என்று முறுக்கேறும் ரெட்டிக்கு முதுகுத் தண்டாக பல பாளையக்காரர்கள் இணைய, தன் இணையைக் கூட விலக்கி வைத்துவிட்டு ரெட்டி போருக்குத் தயாராகிறார்…”இந்தப் புள்ளிங்க எல்லாம் பயங்கரம்” என நாம் நிமிர …படத்தின் முடிவு வெற்றி அல்லது வீரமரணம்.
உய்யலவாடா நரசிம்ம ரெட்டியாக சிரஞ்சீவி வாழாமல் வாளாக இருந்து வீசி எறிந்திருக்கிறார். வெட்டுப்பட்டவர்களை கணக்கெடுக்கவே மிடியாது. அமிதாப் பச்சன் போல ஒரு தாத்தா மனதில் பச்சக்கென ஒட்டிக்கொண்டார். கண்ணை விரித்துப் பார்த்தால் அது அமிதாப் அய்யாவே தான்!!பயங்கரம். நயன்தாராவுக்கு இது கொலையுதிர் காலம் போல. பெண் பாத்திரங்களில் தமன்னா வெகுவாக ஈர்க்கிறார். ரோகிணியும் தான். சுதீப் சிரஞ்சீவிக்கான உரையாடல் காட்சிகள் தரம். அவர்களின் தமிழ் வெர்சன் டயலாக்கும் நலம்.
சிரஞ்சீவியை இவரு எங்கண்ணன் என்று சொல்வதற்காகவே விஜய்சேதுபதியை சென்னையில் இருந்து இஷ்த்துகுனு போய்ருப்பாங்க போல. அவரும் அட்மாஸ்பியர் ஆர்ட்டிஸாக ரெட்டிடா ரொட்டிடா என்று வாயை (ளை) உருவுகிறார்.
படத்தின் முன்பாதியில் வரும் ஓரிரு காதல்காட்சிகளை எல்லாம் கத்திரி வைத்து வெட்டாமல் போர்வாள் கொண்டு வெட்டி இருக்கலாம். நரசிம்ம ரெட்டியின் தேசப்போராட்ட வாழ்க்கைப் பதிவு என்றானதால் நமக்கு கதையின் போக்கும் முடிவும் முன்னதாகவே தெரிந்து விடுகிறது. அதற்கேற்றாப்போல் திரைக்கதையை புத்திசாலித்தனமாக நகர்த்தி இருக்கலாம். அஜித்திற்கு அடுத்து அதிகமாக முதுகு குத்துகளை சிரஞ்சீவி இப்படத்தில் வாங்கி இருக்கிறார். அந்த முதுகு குத்து காட்சிகளை தியேட்டரில் நம் முதுகுக்குப் பின்னாடி இருப்பவரே சொல்லி விடுவதும் பயங்கரம்.
ரத்னவேலு கேமராவுக்கு ரத்தினக்கம்பளம் விரிக்கலாம் வெறித்தன வேலை. பின்னணி இசையிலும் பெரிய இரைச்சல் இல்லை. வி.எஃப்.எக்ஸ் பல இடத்தில் பல்லிளித்தாலும் சில இடத்தில் சொல்லி அடிக்கிறது. ரொம்ப போர் அடித்தாலோ போர் என்பது உங்களுக்குப் பிடித்தாலோ இந்த ரெட்டிப்போரை ஒருமுறை பார்க்கலாம்.