Tamil Movie Ads News and Videos Portal

சீதக்காதி விமர்சனம்

மேட்டர் புதுசு..அதன் அடிப்படை பழசு, திரையில் விஜய்சேதுபதி முழுதும் இல்லை..ஆனால் கதையில் முழுசா இருக்கார். படத்தில் எல்லா இடத்திலும் சிரிப்பு இல்லை. ஆனால் நகைச்சுவை காட்சிகளில் வயிறு வலி வருவதை தவிர்க்க முடியவில்லை. படம் அமானுஷ்ய விசயங்களை பேசவில்லை..ஆனால் பேசி இருப்பது போன்ற தோற்றம் எழாமலும் இல்லை. இப்படி அப்படி கொஞ்சம் இப்படி கொஞ்சமாக தான் சீதக்காதி வந்துள்ளது.

இந்தப்படம் பக்கா பேண்டசி படம் என்ற மனநிலையோடு சென்றால் இது உங்களுக்கான படம். இது மிக சீரியஸயான விசயத்தைப் பேசும்..அல்லது பேசும் விசயம் சீரியஸானது என்று நினைத்தால் அம்பேல் தான்.

ஒரு மகத்தான கலைஞன் இறந்தாலும் அவனுக்குள் இருந்த கலை அழியாது; மறையாது என்ற ஒருவரி தான் கதை. ஆனால் அந்தக் கலை கலைஞனின் ஆன்மாவாக உருவெடுத்து மற்றவர்களின் உடம்பில் ஊடுருவி தாறுமாறாக தன் கலைத்திறமையை வெளிப்படுத்துகிறது என்பதை தான் ஏற்றுக்கொள்ள சிரமமாக உள்ளது. அந்தச் சிரமத்தை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக முற்போக்கு படைப்பாளர்களான எழுத்தாளர் பவா செல்லுத்துரையையும் இயக்குநர் அமீரையும் அய்யாவின் ஆன்மா நடிப்பது உண்மை தான் என்று பேச வைத்திருக்கிறார் இயக்குநர். ஆனால் ஊர் அதைப்பேசுமா?

விஜய்சேதுபதி வரும் 40 நிமிடங்களும் தியேட்டர் மயக்க மருந்து சாப்பிட்ட பேஷண்டாக தூங்கி வழியும் கொடுமை மக்கள் செல்வனின் 25-வது படத்திலா அமைய வேண்டும்? அவர் கேரக்டரை காட்சிப்படுத்திய வேலையை குறைத்து அந்தக் காட்சிகளில் கத்தரி வைக்கும் வேலையைச் செய்திருக்கலாம். அல்லது அவர் வரும் அந்த முதல் 40 நிமிட காட்சிகளை இன்னும் சுவாரசியப் படுத்தி இருக்கலாம். பச்.

கோவிந்த் வசந்தா இசையை கண்ணை மூடிக்கேட்கும் போது கண்மூடிப் போனவர்கள் கூட மண்மீது வந்துவிடுவார்கள் போல. வயிலினில் விளையாடி இருக்கிறார் மனிதர். ஒளிப்பதிவிலும் அப்படியொரு நேர்த்தி. பாலாஜி தரணிதரனின் டைமிங் வசனங்கள் எல்லாம் வேறலெவல் ரகம். “நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்” படம் போலவே படத்தில் சில பக்கங்கள் இருக்கு. அந்தக் காட்சிகளில் தியேட்டர் முழுதும் சிரிச்சா போச்சு ரவுண்டு தான். மவுலி போன்ற மகத்தான கலைஞர்கள் எல்லாம் தமிழ்சினிமாவின் வரம். அய்யாவை தெய்வமாக பார்க்கும் அவரின் கண்கள் கலைத்தாயால் ஸ்பெஷலாக படைக்கப்பட்டவை போல!! அபாரம் மவுலி சார். ராஜ்குமார் மற்றும் தனபால் கேரக்டரில் வரும் சுனில்ரெட்டி இருவரும் தான் சீதக்காதியின் உயிர்நாடி. காமெடி காட்சிகளை குத்தகைக்கு எடுத்து நம்மை கொண்டாட வைத்து இருக்கிறார்கள். சுனில்ரெட்டி அசிஸ்டெண்டாக வருபவரின் உடல்மொழியும் பக்கா. படம் பேசி இருக்கும் ஆத்மா சம்பந்தப்பட்ட விசயம் தவிர இந்த முயற்சிக்கும் படத்தில் உள்ள காமெடி ட்ரீட்டுக்கும் இயக்குநர் பாலாஜி தரணிதரனை பாராட்டத்தான் வேண்டும். அதற்காக மட்டும் தான் பாராட்ட வேண்டும்.