Tamil Movie Ads News and Videos Portal

சிகை விமர்சனம்

ஒரு மனிதனுக்கு செக்ஸ் எவ்வளவு முக்கியம் என்று உணரப்படுகிறதோ அதேபோல் அவனின் அக உணர்வுகளும் அங்கீகரிப்பட வேண்டும் என்று சமூகத்தால் உணரப்படுவதில்லை. அது உணரப்பட வேண்டிய அவசியத்தை சிகை பேசியுள்ளது. படம் பேசிய விதம் சிக்கலாக இருந்தாலும் பேசி இருக்கும் விசயம் குறிப்பிட்ட மக்களுக்கானது; பொது மக்கள் புரிந்துகொள்ள வேண்டிய மகத்தானது.

சந்தர்ப்பால் ஹார்மோன்களால் சந்தோஷமாக ஒருவர் ஏற்படுத்திக் கொள்ளும் எல்லா உறவுகளும் நல்ல உறவுகள் தான். ஒரு ஆணுக்கு பெண் தன்மையுள்ள ஒரு திருநங்கையை பிடித்திருந்தால் எந்த இடத்திலும் அந்த திருநங்கையை அவன் கை பிடித்து இழுக்க முடியும். ஆனால் திருநங்கை தனக்குப் பிடித்த ஆணிடம் பிடித்திருக்கிறது என்பதை சொல்லவே முடியாது. அப்படியும் சொன்னால் சொல்லக் கூடாத வார்த்தைகளால் சூடு வைக்கப்படுவார்கள். அதற்காக திருநங்கை ஒரு ஆணை விரும்பினால் அதை அந்த ஆண் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்லவில்லை. அதேநேரம் அந்த உள்ளத்தின் உணர்வுகளைப் புரிந்து சிறு தலை கோதலோ, சின்ன உச்சி முகர்தலோ செய்யலாமே! நம் குழந்தைகளுக்குச் செய்வதைப் போல.

பரியனாக வந்து பரியேறும் பெருமாளில் உள்ளத்தை அசைத்துப் பார்த்த கதிர் சிகையிலும் மனதில் ஆழமாக பதிந்துள்ளார். நண்பன் மேல் கொண்டுள்ள காதலை களவாட வரும் ஒருத்திக்கு விட்டுக்கொடுக்க முடியாமல் அவர் தவிக்கும் காட்சிகள் நாம் தவிர்க்கவே முடியாத சாட்சிகள். அதேபோல் ராஜ்பரத் நடிப்பும் நிச்சயம் நின்று பேசும். சுயதேவைக்கும் குற்றவுணர்ச்சிக்குமான வித்தியாசத்தை தன் முகம் வழியே அவர் வெளிப்படுத்தும் விதம் அபாரம். ரித்விகா மீரா நாயர் இரண்டு நாயகிகளில் இருவருமே கவனம் ஈர்க்கிறார்கள். மயில்சாமி வழக்கம் போல தன் பங்கிற்கு பின்னியெடுத்து இருக்கிறார்.

முதல்பாதியில் சீராக பயணிக்கும் திரைக்கதை கதிர் தன் பிரச்சனையைச் சொன்னபிறகு சடர்ன் ப்ரேக் போட்டது போல் நின்று விடுகிறது. இதற்கு மேல் கதையில் என்ன ? என்ற கேள்வி எழுவதையும் தவிர்க்க முடியவில்லை. ஆனால் ஆழமான முடிவால் அந்த தேக்கத்தை மன்னித்து விடலாம்.

தன் உணர்வுகளை வெளிப்படுத்தும் திருநங்கைகள் வன்மத்தையும் வக்கீரத்தையும் பிரயோகிக்க கூடாது என்பதையும் அவர்களை இந்தச் சமூகமும் அரசும் அப்படி பிரயோகிக்கும் மனநிலையை வாழ்நிலையை கொடுக்கக் கூடாது என்பதையும் இயக்குநர் இன்னும் ஸ்ட்ராங்காகச் சொல்லி இருக்கலாம். ஆனாலும் இப்படிச் சொல்லத் துணிந்த துணிச்சலுக்கு முதல் சபாஷ்.