பிரதமரின் பாதுகாப்பு பிரிவில் இருக்கும் எஸ்.பி.ஜி டீமில் ஒருவர் சூர்யா. அவருக்கு விவசாயம் என்றாலே உணர்ச்சி வசப்பட்டு வார்த்தைகள் பொங்கிவிடும் அளவிற்கு விவசாயம் மீது காதல். மேலும் “விவேக”மாக சில அண்டர்கவர் வேலைகளையும் செய்யும் அயன் அவர். பாகிஸ்தான் சலூன்கடையில் வேலை செய்வது போல் நடித்து அங்குள்ள விசயங்களை எல்லாம் தெரிந்துகொள்ளும் வல்லவர். அவர் பாகிஸ்தானில் இப்படியெல்லாம் ஊடுருவி தேசப்பற்றோடு பணி செய்தது இந்தியப்பிரதமருக்கே சமுத்திரக்கனி சொல்லித் தான் தெரியும். அந்தளவிற்கு சூர்யாவின் கேரக்டர் சூரியன் போல உச்சம் பெற்ற கேரக்டர்.
அப்படியான சூர்யாவால் பிரதமரை காப்பாற்ற முடியாமல் போவது துரதிர்ஷ்டம் தான். இருந்தாலும் பிரதமரை காவு வாங்கிய கருப்பு கார்ப்பரேட் ஆடுகளை சூர்யா எப்படி களையெடுத்தார்? அதான் காப்பான்.
மோகன்லாலுக்கு மோடி வேசம்?? மிகச்சிறப்பாக பொருந்துகிறது. அதாவது பிரதமர் வேசம். உடை நடை பாவனை நவரசம் என அசத்துகிறார். கிட்டத்திட்ட அம்பானியை டச் பண்ணுவது போல ஒரு கேரக்டர் சிராக் ஜானிக்கு. சும்மா சொல்லக்கூடாது மனிதர் தரமான சம்பவங்களை ஜஸ்ட் லைக் தட் போல செய்கிறார்.பூமன் இரானியும் நல்ல நடிப்பு தான். ஆர்யா சாயிஷா, சமுத்திரக்கனி உள்ளிட்ட கேரக்டர்கள் காப்பானுக்கு காப்பான்களா இருக்கிறாங்க. ஆர்யா எதார்த்தமா பண்ற ஒருசில செயல்கள் காமெடியா இருக்கு. சூர்யா சீரியஸா பண்ற ஒரு சில விசயங்களும் காமெடியாத்தான் இருக்கு.
சூர்யா தயவுசெய்து கொஞ்சம் சோல்டரை இறக்கி விடவும். எப்போதும் விறைப்பாகவே இருப்பதைப் பார்த்தால் உண்மையான எஸ்.பி.ஜி ஆபிசர்ஸுக்கே அலர்ஜி வந்திடும். மற்றபடி ஆக்ஷன் காட்சிகளில் மனிதர் அள்ளு கிளப்பி இருக்கிறார். காக்க காக்க போன்ற படங்களின் காதல் காட்சிகளில் சூர்யாவைப் பார்த்துவிட்டு இப்படத்தின் காதல்காட்சிகளைப் பார்த்தபின் கடந்த காலத்தை நினைத்து வருந்தத்தான் வேண்டிய இருக்கிறது.
கே.வி ஆனந்த் விஷுவல் ட்ரீட்மெண்டில் வழக்கம் போல் சிறப்பான விசயங்களை வைத்திருக்கிறார். ஒருசில வசனங்களும் ரசிக்க முடிந்தது. காஷ்மீரில் குழந்தைகள் தமிழில்!!!? பாடும் காட்சி முடிந்ததும் மோகன்லால் தமிழில் பேசும் வசனங்கள் எல்லாம் நல்லாருந்துச்சு.
படம் ஒருபக்கம் ராணுவ வீரர்களின் அர்ப்பணிப்பையும் சொல்கிறது. மறுபக்கம் விவசாயிகளின் பிரச்சனைகளையும் சொல்கிறது. அது ஒரு தனிக் குழப்பம். படத்தில் வரும் புதியபுதிய தகவல்கள் எல்லாம் ஆச்சர்யப்பட வைக்கிறது. நிறைய இன்பஃர்மேட்டிவான மேட்டர்ஸ். சூப்பர்.
காட்சிகள் எல்லாம் வேகமா நகர்றது தான். அதுக்காக ஓடுற வேகத்துல கதை, திரைக்கதை, லாஜிக் எல்லாத்தையும் மறந்துட்டுப் போனா எப்படி ஜி
மொத்தத்துல அயன் அளவுக்கு தூக்கிப் பிடிக்காட்டாலும் மாற்றான் அளவுக்கு சறுக்கல என்பது ஆறுதல். எல்லாருமே விவசாயப்பிரச்சனையைப் பேசுவதே பெரிய பிரச்சனையா இருக்கு. கத்துக்குட்டின்னு ஒரு படம் பேசிய விவசாய அரசியலில் இருந்து காப்பான் கத்துக்கணும் என்பது நம் கருத்து
அப்புறம்..
நம் பாரதப்பிரதமர் நரேந்திர மோடியை நகல் எடுத்தது போலவே மோகன்லாலின் தோற்றம் இருக்கும். மனுதர்மம் மனித தர்மம் பற்றியெல்லாம் மோகன்லால் கேரக்டர் பேசும். மேலும் தமிழக விவசாய நிலங்களை சூறையாடுவதில் பிரதமருக்கு உடன்பாடே கிடையாது. எல்லாம் இந்த கார்ப்பரேட் அரக்கர்கள் செய்யும் மாய்மாலம். (எவ்ளோ உஷாரு) இப்படியாக தியாகத்தின் திருவுருவமாய் பிரதமரைச் சித்தரித்து இருக்கிறார் கே.வி. இது பி.ஜே.பி தொண்டர்களுக்கு ஏக ஆனந்தம் கொடுக்கும். ஆனால் ஒரு இடத்தில் பிரதமர் சாமி கும்பிடுகிறார். அவரின் மனைவி அவருக்கு குங்குமம் வைக்க வருகிறார். அதைத்தடுக்கும் பிரதமர் தன் மனைவியின் நெற்றியில் இருக்கும் குங்குமத்தை அவரது நெற்றியால் மடை மாற்றிக்கொண்டு, “நீதான் எனக்கு சாமி” என்கிறார். இப்படியும் ஒரு காட்சி. சேம் சைடு கோல் என்பது இதுதான் பார்த்தேளா?