Tamil Movie Ads News and Videos Portal

கதிர் , யோகிபாபு கூட்டணியில். ” ஜடா ” டிசம்பர் 6ல் வெளியாகிறது

“தி போயட் ஸ்டுடியோஸ்” தயாரிப்பில் அறிமுக இயக்குநர் குமரன் இயக்கியிருக்கும் படம் “ஜடா”. “பரியேறும் பெருமாள்”, ” பிகில்” என அடுத்தடுத்து வெற்றிப்படங்களில் நடித்து அசத்தும் கதிர் இப்படத்தின் கதாநாயகனாக நடித்திருக்கிறார். யோகிபாபு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார். ஒளிப்பதிவு ஏ.ஆர்.சூர்யா, எடிட்டிங் ரிச்சர்ட் கெவின். இப்படம் வருகிற டிசம்பர் 6-ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

வட சென்னையில் வசிக்கக் கூடிய இளைஞர்களின் பெருங்கனவுகளில் ஒன்றான கால்பந்தாட்டத்தினை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே கால்பந்தாட்டத்தினை மையமாக வைத்து வெற்றிபெற்ற “பிகில்” படத்திலிருந்து முற்றிலும் இந்தப் படம் மாறுபட்டது என்கிறார் இயக்குநர் குமரன்.

இது குறித்து மேலும் அவர் கூறுகையில்,

“தமிழ் இளைஞர்களுக்கு பிடித்த விளையாட்டுகளில் ஒன்றாக கால்பந்து மாறி வருகிறது. பலர் இந்திய அளவில் விளையாடக் கூடிய திறமை பெற்றவர்களாக இருந்தாலும், சில காரணங்களால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டே வருகிறார்கள். இந்த எதார்த்தமான உண்மையைக் கொண்டே இப்படத்தினை உருவாக்கியிருக்கிறோம். திறமையிருந்தும் புறக்கணிக்கப்படும் ஒரு இளைஞன், அதே விளையாட்டு சூதாட்டத்திற்குள் போய் அடுத்து என்னவாகிறான்? என்பதே கதை. இதுவரை நீங்கள் கேள்விப்பட்டிராத 7’s கால்பந்தாட்டத்தை காட்ட இருக்கிறோம். நிச்சயமாக இந்தப்படம் ஒரு புதிய அனுபவமாக இருக்கும். கதிர், யோகிபாபு காம்பினேசனில் படம் முழுக்க காமெடி பட்டாசாக இருக்கும்” என்று நம்பிக்கையோடு கூறினார்.