பொதுவாக என் மனசு தங்கம் என நம்மை அநியாயத்திற்கு பொங்க வைத்த உதயநிதிக்கு நிதி மட்டும் அல்லாமல் சினிமாவில் நல்ல விதியையும் ஏற்படுத்திக் கொடுக்கப் போகும் ஒரு படம். கதையோடு ஒன்றிப்போயுள்ள அவருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.
கண்ணே கலைமானே என்ற டைட்டிலுக்கும் கமலக்கண்ணன் என்ற ஹீரோவின் பெயருக்கும் கதையில் அழகாக நியாயம் சேர்த்திருக்கிறார் இயக்குநர் சீனுராமசாமி. அக்ரி கல்ச்சர் படித்துவிட்டு இயற்கை விவசாயம் செய்யும் இளைஞர் கமலக்கண்ணன். நேர்மையான வங்கி அதிகாரியாக பாரதி. இருவருக்குள் ஏற்படும் காதலும் காதலுக்குப் பின்னும் காதலுக்குள்ளும் ஏற்படும் உரிமையும் கடமையும் கலந்த நேசமும் தான் கண்னே கலைமானே! அரிவாள் சண்டை இல்லாமல், ஜாதிச்சாயம் பூசாமல் சேவல் கூவும் நேரத்தில் இருக்கும் அமைதியை திரை முழுதும் உலவ விட்டிருக்கிறார் இயக்குநர் சீனுராமசாமி. அந்த விடியற்காலை அழகை தென்றல் காற்றின் இதமாய் இசையில் குழைத்து தந்திருக்கிறார் யுவன்சங்கர் ராஜா. பின்பாதியில் இசை எது கதை எது என்ற தரம் பிரிக்க முடியாதபடி படத்தோடு கலந்து கரைந்திருக்கிறார் யுவன். தமன்னாவிற்கும் உதயநிதிக்கும் துவங்கும் காதலை நாகரீகமாக திரையில் சொல்லும் போது ஆண்களுக்கு தமன்னா மீதும், பெண்களுக்கு உதயநிதி மீதும் ஒரு நேசம் பிறந்துவிடுகிறது.
பூ ராம் கதாபாத்திரம் குடும்பத்தைப் பேணும் விதமும் வடிவக்கரசி உறவுகளை அணுகும் விதமும் ரியாலிட்டியோடு ஒத்துப்போகிறது.
வடிவக்கரசிக்குள் இத்தனை வடிவங்களா? தமன்னா தலையில் எண்ணையை ஊத்திவிட்டு தலயைப் பிசைந்தபடியே அவர் பேசும்போது …அட அட அட!
இப்படி படத்தில் நிறைய பாஸிட்டிவ்ஸ் இருந்தபோதும் கதையில் நாயகனின் இலக்கு இதுதான் என்ற தீர்மானம் இல்லாததால் திரைக்கதையில் சுவாரசியம் குறைகிறது. காட்சிகள் அழகாக நகர்கிறது தான். ஆனால் அதற்குள் எதோவொன்று குறைகிற உணர்வு ஏற்பட்டு விடுகிறது.
விருந்துக்குச் சென்ற இடத்தில் இலை விருந்து தந்துவிட்டு வெத்தலை பாக்கு தராமல் விட்டது போல சின்ன குறை. வெத்தலைப் போடும் பழக்கம் இல்லாதவர்கள் தான் இப்போது அதிகம் என்பதால் கண்ணே கலைமானே நல்விருந்து என்பதையும் குறிப்பிட விரும்புகிறோம்!